பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 என்று பல வல்லின மெய்களை வைத்து மனத்திண்மையைக் காட்டும் வலிய ஓசையை எழச் செய்கிறார். வெட்டும் கடா - அடியார்களால் வெட்டுவதற்குரிய கடா உலகத்தில் சில தெய்வங்களுக்குப் பலியாக இங்கே உலவுகிற எருமைக் கடாக்களைச் சிலர் வெட்டுவார்கள். ஆனால் அருண கிரியார் வெட்ட நினைக்கிற கடா யமன் ஏறும் கடா. 'பக்தர் களால் வெட்டுவதற்குரிய கடாவில் தோன்றுகின்ற கூற்றன் தன் வலியை இழந்துவிடும் வண்ணம் நீ அருள் செய்ய வேண்டும்: என்று இந்தப் பாட்டில் பிரார்த்திக்கிறார். .* வெட்டும் கடாமிசைத் தோன்றும்வெங் கூற்றன் விடும்கயிற்றால் கட்டும்பொழுது விடுவிக்க வேண்டும்; காரசலங்கள் எட்டும் குலகிரி எட்டும்விட் டோடஎட் டாதவெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே. (வெட்டுவதற்குரிய ஆண் எருமையின் மேல் மரண காலத்தில் வந்து தோன்றும் வெம்மையான கூற்றுவன் வீசுகின்ற பாசத்தினால் அடியேனைக் கட்டும்பொழுது நீ அடியேனை விடுவிக்க வேண்டும்; திக்கு யானைகள் எட்டும் பெரிய மலைகள் எட்டும் இருந்த இடத்தை விட்டு ஒடும்படியாகவும், பொறிகளுக்கும் மனத்துக்கும் எட்டாத பரமாகாச வெளிவரையும் ஏனைய பொருள்களெல்லாம் மறையும் படியும் விரிக்கின்ற தோகையை உடைய மயிலை உடையவனே! கராசலம் - கைம்மலை, யானை; இங்கே திக்கயங்கள். குலகிரி - சிறந்த மலைகள்; அஷ்ட குலாசலம் என்பது வழக்கு. விட்டு - தமக்குரிய இடத்தைவிட்டு. தோகையை விரிக்கும் பொழுது உண்டான காற்றினால் யானைகளும் மலைகளும் இடம் விட்டு ஓடின. எட்டாத - கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத, புதைய - மறைய. கலாபம் - தோகை. மயூரம் - மயில். மயூரத்தன் - மயிலை வாகனமாக உடையவன்.) 352