பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இலக்கணத்தை இந்த அடி சொல்கிறது. உலகத்திலுள்ள எல்லாப் புலவர்களுமே காதல் இன்பத்தைப் பற்றிக் கருதி இருக்கிறார்கள்; பாடி இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒன்று பட்டுப் பழகுவதே இன்பம் என்று யாவரும் அறிவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் உடம்பு இணைவது மாத்திரம் அன்று; உள்ளமும் இணைய வேண்டுமென்று வற்புறுத்திப் பேசு வார்கள். கருத்து ஒருமித்து ஆதரவு படும் இன்பத்தை உலகத் திலுள்ள பெரியவர்கள் எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் காதலைப் பற்றிச் சொல்கிற நுட்பம் ஒன்று உண்டு. உடல் இணைவது, உள்ளம் இணைவது போலவே உயிரோடு ஒன்றுபட்டு அமைவது காதல் என்பது அவர்களுடைய கருத்து. பிறவிதோறும் காதல் தொடர்ந்து வரும் என்ற உண்மையை அவர்கள் பல இடங்களில் வற்புறுத்திப் பேசி இருக்கிறார்கள். ஒளவைப் பாட்டி, 'காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்' என்று சொன்னாள். 'கருத்து ஒருமித்த பிற்பாடுதானே காதல் உண்டாக வேண்டும்? காதல் என்பது கண்ணால் கண்டு, கருத்து ஒருமித்து ஆதரவு படும்போது உண்டாவது அல்லவா? முதலில் காதல் என்று சொல்கிறாளே என்று நமக்குத் தோன்றலாம். அந்தச் சொல்லிலேதான் நம் நாட்டுக் காதல் வாழ்க்கையின் நுட்பத்தைப் பாட்டி அமைத்திருக்கிறாள். பல பிறவியிலே ஒன்றுபட்டுக் காதல் உடையவர்கள், இந்தப் பிறவியிலும் காதல் கொண்டு கருத்து ஒருமித்து அன்பு செய்வதே இன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். பிறவிதோறும் வரும் காதல் சங்ககாலத்து நூல்களிலே, ஒருவனும் ஒருத்தியும் செய்கிற காதல் பல பிறவியில் தொடர்ந்து வருகிறதென்று புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'இம்மை மாறி மறுமை ஆயினும் நீயா கியர்எம் கணவனை; யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே” 42