பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 உடம்புகளுக்கும் உள்ளங்களுமிடையே உள்ள தொடர்பு அந்த மூலக் காதலினுடைய விளைவுகளே. இவற்றையெல்லாம் எண்ணிய பாட்டி பிறவிதோறும் காதல் உடைய இருவர் இந்தப் பிறவியில் மனம் ஒத்துக் காதல் செய்வது இன்பம் என்று சொன்னாள். 'காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்." இந்த மூன்றிலும் பற்றற்று இறைவனுடைய திருவருளைப் பெறுவது வீடு என்று முடித்தாள். 'பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.' அறத்தின் இலக்கணம் இந்தப் பாட்டில் அறத்தின் இலக்கணத்தைச் சொல்ல வந்த வள் மிகச் சுருக்கமாக 'ஈதல் அறம்' என்று சொல்லிவிட்டாள். ஈதல் - கொடுப்பது. எதைக் கொடுப்பது? ஆடை கொடுத்தாலும், ஆபரணம் கொடுத்தாலும் உண்டி கொடுத்தாலும், உறங்கும் இடம் கொடுத்தாலும், யார் யாருக்கு எது எது வேண்டுமோ அதைக் கொடுத்தாலும் எல்லாம் ஈகைதான். அறச்செயல்கள் பலவகையானாலும் அவற்றுள் ஈகை சிறந்தது. அதுபோலவே பலவகையான ஈகைகளிலும் சிறந்ததாக ஓர் ஈகை இருக்கிறது. அறங்கள் முப்பத்திரண்டு வகை என்று சொல்வார் கள். அவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது அன்னதானம். அறத்தின் பகுதிகளில் சிறந்தது ஈகை என்றால், ஈகைப் பகுதிகளில் சிறந்தது பிறருடைய பசியைப் போக்க உண்டி அளிக்கும் ஈகையாகும். சிறந்த தானம் காஞ்சீபுரத்தில் எம்பெருமான் கொடுத்த இரு நாழி நெல் கொண்டு அம்பிகை முப்பத்திரண்டு அறங்கள் நடத்தியதாகச் சொல்வார்கள். அந்த முப்பத்திரண்டு அறங்களிலும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடந்தது.