பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நெல்லைப் பொறுக்கிச் சேர்த்து நாட்டிலுள்ள புலவர்களை எல்லாம் வாழ வைக்கிறவர் சடையப்ப வள்ளல் என்பதை அப்புலவர் தெரிந்து கொண்டார். கம்பரின் நன்றியறிவு தமக்குச் சோறு அளித்த சடையப்பரைக் கம்பர் இராமா யணத்தில் பத்து இடங்களில் பாடியிருக்கிறார். மிகவும் முக்கிய மான இடத்தில் அந்த வள்ளலைப்பற்றிய புகழை அமைத்திருக் கிறார். இராமாயணத்தை இந்த நாட்டில் பிரசங்கம் செய்கிறவர்கள் ஏழு நாள் ஒன்பது நாள், ஒரு மாதம், ஒரு வருஷம் என்று சொல் வார்கள். மிகக் குறைந்த நாளில் எத்தனை சுருக்கிச் சொன்னாலும் இராம பட்டாபிஷேகத்தைச் சொல்லாமல் யாரும் விடமாட்டார்கள். எவ்வளவு நாள் குறைவாகச் சொன்னாலும் இராமாவதாரம், சீதா கல்யாணம், இராவண சங்காரம், இராம பட்டாபிஷேகம் ஆகிய வற்றைச் சொல்லாமல் இருக்கும் வழக்கம் இல்லை. யார் இராமாயணம் சொன்னாலும் இராமனுடைய புகழோடு சடையப்பர் புகழும் வரவேண்டும் என்று கம்பர் கருதினார். இராமபட்டாபிஷேகத்தைச் சொல்லும் பாட்டில் சடையப்பர் புகழைப் புதைத்து வைத்தார். 'இராம பட்டாபிஷேகத்தன்று விசுவாமித்திரர், வசிஷ்டர், அநுமன், சீதா பிராட்டி முதலிய எல்லோரும் சபையில் இருந்ததாகச் சொல்லலாம். அவற்றை யெல்லாம் கதைப் போக்கில் சொல்வது இயற்கை. சடையப் பரைப் பற்றி என்ன சொல்வது? அங்கே அவருக்கு இடம் ஏது?" என்று நமக்குத் தோன்றும். கம்பருக்கு எப்படியோ ஒரு தந்திரம் தெரிந்தது. சடையப்பர் புகழை அந்தப் பாட்டில் மிகவும் நயமாக அமைத்துவிட்டார். "அரியணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாள் பற்றப் பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெய்மன் சடையன் கங்கை மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி.” 52