பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் நெகிழ்ச்சி இல்லாமல், நமக்கும் அவன் படுகின்ற துன்பம்போல நாளைக்கு வருமே என்கிற நினைவு இல்லாமல் கல் மலை மாதிரியாகத்தான் நிற்பான். மனிதனுடைய அகங்காரமாகிய மலையிலே மமகாரமாகிய பல கொடுமுடிகள் இருக்கின்றன. இந்த அகங்கார மமகாரமாகிய அகப்பற்றுப் புறப்பற்றுகளே பல பல பிறவிகளுக்குக் காரணமாகின்றன. மமகாரங்களாகிய கொடு முடிகளோடு வளர்ந்து நிற்கும் அகங்காரமாகிய அத்திரியைக் கூறுபோட வேண்டுமானால் ஞானம் வரவேண்டும். அகங்கார மமகாரங்களாகிய சிகராத்திரியைக் கூறிட்டது ஞானவேல்; அகங்காரத்தைச் சார்பாகக் கொண்ட சூரனைச் சங்காரம் பண்ணியது வேல். சிகராத்திரி கூறிட்ட வேலோடு செஞ்சேவலையும் பாட வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். சேவலின் தத்துவம் சேவல் ஆண்டவனுடைய வெற்றிக் கொடியாக விளங்குகிறது. கோழி என்று நினைத்த மாத்திரத்திலே நல்லவர்களுக்குப் புற இருளைப் போக்கடிக்கின்ற சூரியனுடைய நினைவு வரும். முருகனிடத்தில் ஈடுபட்டவர்களுக்கு அஞ்ஞான இருளைப் போக்கடிக்கின்ற ஞானபானுவாகிய முருகனுடைய நினைவு முந்தும். செம்மை என்பது தமிழில் மிகச் சிறப்புடைய சொல். நம் உடம்பில் ஊற்றமாக இருக்கும் குருதி செம்மைதான். பரிபூரணம், நிறைவு என்பதைக் குறிப்பதற்கும் செம்மை என்ற சொல்லை வழங்குகிறோம்; ஒருவன் நன்றாகப் பாடினான் என்றால், 'செம்மையாகப் பாடினான்' என்றும், ஒரு காரியத்தைத் திறம் படச் செய்தால், 'செம்மையாகச் செய்தான்' என்றும் சொல் கிறோம். குறையின்றி நிறைவாக முடித்தான் என்பதையே, 'செம்மையாகச் செய்தான்' என்கிறோம். உள்ளத்தில் கெடுதல் இல்லாமல் நேர்மை நிறைவு பெற்றிருந்தாலும் உள்ளம் செம்மை யாக, தூயதாக இருக்கிறது என்று சொல்லலாம். சிறப்புடைய சேவலை நிறம் பற்றி மாத்திரம் செஞ்சேவல் என்று சொல்ல வில்லை; குணம் பற்றியும் அவ்வாறு சொன்னார். 79