பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் முன்னால் அது வந்தால் பாதுகாத்துக் கொள்வதற்குக் கவசம் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது புலி வந்தால் என்ன செய்யும் என்று கேட்கும் தைரியம் உண்டாகி விடும். இந்த உலகத்தில் செய்ய வேண்டியதைச் செய்தவர்கள் மரணம் என்ற துன்பம் வந்தாலும் அஞ்சுவது இல்லை. 'சந்ததமும் வேதமொழி யாதென்று பற்றினது தான்வந்து முற்றும் எனலால் சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பதைச் சதாநிஷ்டர் நினைவ தில்லை' என்று தாயுமானவர் சொல்கிறார். உலகத்தில் பிறந்த அத்தனை பேரும் இறந்துபடுவார்கள் என்பது உறுதி. அவரவர்கள் அநுபவிக் கின்ற துன்ப நிலைகள் மாறுபாடு உடையனவாக இருந்தாலும் மரணம் என்னும் துன்பத்தில் யாருக்கும் வேறுபாடு இல்லை, "வினைப்போக மேயிந்தத் தேகம்கண் டாய்வினை தான்ஒழிந்தால் தினைப்போ தளவும்நில் லாதுகண் டாய்." ஊழ்வினை முற்றுப்பெறும்போது நிச்சயமாக மரணம் அடை வோம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அறியாவிட்டா லும் உண்மை உண்மைதான். இதற்காக மரணம் வருமே என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்குரிய பாதுகாப்பைச் செய்ய வேண்டும். மார்கழி மாதம் வந்தால் குளிர் வருகிறது. குளிர் நமக்கு மட்டும் வருவது இல்லை. சமுதாயம் அத்தனைக்கும் பொதுவாக வருகிறது. மக்கள் எல்லோரும் குளிரினால் துன்புறுகிறார்கள். 'குளிரினால் உண்டாகும் துன்பத்திற்கு நான் அஞ்ச மாட்டேன்’ என்று ஒருவன் சொன்னால் மார்கழி மாதத்தில் குளிரே வராமல் தடுத்துவிடுகிறான் என்று பொருள் அல்ல. குளிரில் விறைக் காமல் இருக்கக் கம்பளிச்சட்டை, போர்வை முதலியவற்றை எல்லாம் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கிறான். துன்பம் வரும் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறான். துன்பத்தின் உறைப்பு இல்லாமல் காப்பாற்றிக் கொள்கிறான். அதனால் அவனளவில் துன்பம் இல்லையாகிறது. மழை 99