பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 "வசனம் மிக ஏற்றி அலையாதே மனது துயராற்றில் உழலாதே" என்று திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் அருளியிருக் கிறார். வார்த்தைகளை மிக அதிகப்படுத்திப் பேசி மனத்தில் துயர் கொண்டு உழலாமல் இருக்க வேண்டுமென்று அந்தப் பாட்டில் உணர்த்துகிறார். நாக்கில் உண்டாகும் மாசுகளைக் கழுவிக் கொள்ள வேண்டுமானால் இறைவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். இறைவன் திருவடிகளைப் பார்க்கும் விழி வேறு ஒன்றையும் பாராமல் இருக்கிற நிலை வரும். அந்தப் பாதங்கள் விழிக்குத் துணையாக இருக்கும். அதுபோல நம் மொழிக்குத் துணையாக அவன் திருநாமங்கள் இருக்கும். விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள். முருகா என்னும் நாமம் வடிவேற் பெருமானின் நாமங்களுக்குள் மிகவும் சிறந்தது முருகா என்பது. அதனை நக்கீரர், “அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக" என்று திருமுருகாற்றுப் படையில் பாராட்டுவார். முருகு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் ஞான மணம், தெய்வத் தன்மை, இளமை, அழகு என்பவை சிறந்தவை. இந்த நான்கும் இறைவனுடைய பிற கோலங்களில் சிறப்பாக அமை யாமல் முருகத் திருக்கோலத்தில் அமைந்தமையினால் முருகன் என்னும் நாமம் அவனுக்கு வாய்த்தது. வேறிடத்தில் பெறுவதற்கு அரிய இலக்கணங்கள் அமைந்ததனால் முருகன் என்னும் திரு நாமம் அவனுக்கு கிடைத்தது. அந்த நாமம் மிகச் சிறந்தது. தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகை எழுத்துக்கள் உண்டு. முருக என்ற திருநாமத்தில் மெல்லினம், இடையினம், வல்லினம் என்று மூன்றும் இருக்கின்றன. அகர உகர மகரங்களைத் தலைக் கீழாகச் சொன்னதுபோல 'முருக' என்று திருநாமம் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். க என்பதில் 136