பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை திருநாமம். அதை அடுத்தடுத்துச் சொன்னால் நம் நாவுக்கு அது துணையாக இருக்கும். நம் நாவில் எந்தக் குற்றமும் வராமல் வாழலாம். நாவில் வருகிற குற்றங்கள் நான்கு வகை. புறம் கூறுதல், பொய்யுரைத்தல், பிறர் மனம் புண்பட இன்னாத கூறுதல், பயன் இல்லாதன சொல்லல் ஆகிய நான்கும் அகங் காரம் உடையவர்களிடத்தில் தோன்றுகின்றன. இறைவன் திரு நாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிய நாவுக்கு மற்ற எந்த வார்த்தைகளும் பயனற்றனவாகத் தோன்றும். பேசப் புகுந்தால் இறைவன் நாமத்தைப் பேச வேண்டும் என்று தோன்றும். ஒரு வள்ளல் தன்னிடம் யார் எப்போது வந்தாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பண உதவி செய்வதாகச் சொல் கிறான். அவனிடம் தடையின்றிப் பணத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளவன், எப்போதும் அவன் பக்கத்தில் இருப் பான். தடுக்க முடியாத காரியங்கள் இருந்தாலும் கூடிய வரையில் எப்பொழுதெல்லாம் அவனிடம் வந்து வாங்கிக் கொள்ளலாமோ அப்பொழுதெல்லாம் வந்து வாங்கிக் கொள்வான். அதுபோலவே இறைவனிடம் அன்பு பூண்டவன் எப்பொழுதெல்லாம் ஒய்வு கிடைக்குமோ, சந்தர்ப்பம் இருக்குமோ அப்பொழுதெல்லாம் அவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பான். அப்படி இருந் தால் அவனுடைய வாக்கினால் வருகிற பாவங்கள் அகலும். இறைவன் திருநாமமே அவனுக்குத் துணையாக இருக்கும். மொழிக்குரிய தகுதி சும்மா முருகா என்று சொன்னால் அது நமக்குத் துணையாக நில்லாது. பாவங்களைச் செய்து பல பொய்களைப் பேசி முருகா என்று சொன்னால் அவனுக்கு அந்த நாமம் துணை நில்லாது. தான் செய்கிற பாவத்திற்கு அந்த நாமத்தைத் துணையாகக் கொள்வதைக் காட்டிலும் வஞ்சகச் செயல் வேறு இல்லை. அதனால்தான் அருணகிரியார், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை என்று சொன்னார். எவன் சத்தியத்தை உணர்கிறானோ, எவன் இறைவன் ஒருவன்தான் உண்மையான பொருள் என்று தெரிந்து பக்தி கொள்கிறானோ அவன் முருகா என்று சொன்னால் அவனை ஆண்டவன் காப்பாற்ற முற்படுவான். 139