பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் இறைவனாகவே பார்ப்பதற்கு வழி உண்டு. தத்தாத்திரேய முனிபுங்கவர் உலகத்தி லுள்ள பொருள்களை எல்லாம் தமக்கு உபதேசம் செய்கின்ற குருவாகக் கண்டார் என்று சொல்வார்கள். பாகவதத்தில் இந்தக் கதை வருகிறது. தாசியைக் கண்டு, 'நான் உன்னைப்போல இருக்க வேண்டும்' என்று அவர் சொன்னாராம். 'இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும், நோய் உடையவனாக இருந் தாலும், நோய் அற்றவனாக இருந்தாலும் வருகிறவனுடைய பொருளிலேயே அவளுக்குக் குறி இருப்பதுபோல, இந்த உலகத் தில் எவ்விதமான நிலை எனக்குக் கிடைத்தாலும் எப்போதும் இறைவனைக் குறியாகக் கொண்டு நிற்கவேண்டுமென்பதை உன்னிடத்தில் தெரிந்துகொண்டேன்' என்று கூறினாராம். அவருக்கு அத்தகைய காட்சியும், கருத்தும் இருந்தன. அந்த வகையில் அவர் மன வளர்ச்சி பெற்றிருந்தார். பழக்கமும் அநுபவமும் நாமும் அந்த வகையில் முயற்சி செய்து பழகினால் முகம் ஆறுடைக் குருநாதனாக எல்லாவற்றையும் பார்க்கும் நிலை வரும். அந்த நிலை எப்போது சித்திக்கிறதோ அப்போது நமக்குச் சிவயோக சித்தி உண்டாகும். அதற்கு வழி, எல்லாமாக எல்லா விடத்திலும் இறைவன் இருக்கிறான் என்று எண்ணி, அவன் இருப்பதைக் காணவேண்டும் என்ற பேராசையை உள்ளத்தில் வளர்த்துக் கொள்வதுதான். இது ஆசை என்று பெயர் பெற்றாலும் இதுவே பக்தியில் ஒர் நிலை. இதுவே மிக எளிய வழி என்று தோன்றுகிறது அருணகிரியாருக்கு. இதுவே கஷ்டமாக இருக்குமானால், மூச்சைப் பிடித்து அடைத்து உடம்பை ஒறுத்து றடயோகம் செய்வதனால் இறைவனைக் காண்பது என்பது எத்தனை கடினமானது! அன்பு செய்யத் தெரிந்த மனிதனுக்கு, அன்பு வைக்கும் பொருளைப் பற்றிய நினைவு பார்க்கும் பொருளிடத்தில் எல்லாம் வருகிற நிலை உள்ள மனிதனுக்கு, இறைவனிடத்தில் அன்பு வைக்கும் பழக்கம் உண்டாகிவிட்டால் உலகம் முழுவதும் அந்தப் பொருளுக்கு இடமாகவே ஆகிவிடும். இது மனிதனுடைய மன இயல்புக்கு ஒத்தது. ஆகையால் பக்தி செய்வது மிகவும் எளிது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். 172