பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் கொடிய ஐவர் ஆயின. அந்த ஐந்தும் நம் வழியில் நின்றால் அவற்றால் நாம் பக்தி பெறுவதற்குரிய நெகிழ்ச்சி நிகழும். இதனைத் திருமூலர் திருமந்திரத்தில் ஒரு பாட்டில் கூறுகிறார். "பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே.” வெறியோடு கூடிய மாடுகள் தக்கபடி அடக்கப்பெற்றால் பாலைச் சொரியும் என்று உருவகமாக இந்தப் பாட்டைச் சொல்கிறார். ஐந்து இந்திரியங்களும் தம் போக்கில் போய்க் கொண்டிருந்தால் அவற்றைப் பெற்றவனுக்குத் துன்பந்தான் விளையும். அப்படி யின்றி அவை அடங்கித் தம் போக்கில் போகாமல் நின்றுவிட்டால் அப்போது இறைவனைத் தொழும் வகையில் அந்த ஐந்து இந்திரியங்களும் செயல்படும். அதனால் அவனுடைய அருள் அநுபவத்திற்குரிய வழியில் அவை நிற்கும். பகையாக நின்றவை உறவாக ஆகிவிடும். இதனையே திருமூலர் உருவக வகையில் சொல்லுகிறார். அப்படி, கொடிய ஐவராக இருக்கிறவர்கள் நமக்கு ஏற்றவர் களாக ஆகவேண்டும் என்றால் இறைவன் திருவருளும் அவன் திருத்தாளிடத்தில் அன்பும் உண்டாக வேண்டும். அவன் திரு வடியைத் தொழல் வேண்டும். இதுவரை அவனுடைய திரு வருள் இல்லாமையினால் அவை புறப்பொருட் பார்வையுடை யனவாக இருந்தன. அந்தப் பார்வை இப்போது அறுந்து போகும். கொடிய ஐவர் பராக்குஅறல் வேண்டும். பராக்கு என்பது பார்க்க வேண்டிய இடத்தைப் பார்க்காமல் மற்றவற்றைப் பார்ப்பது. பராங்முகம் என்பதைப் பாராக்கு என்று தமிழில் சொல்கிறோம். இறைவனுடைய அருளால் அன்பு உண்டான பிறகு இவை யாவும் மாறிவிடும். அவன் அருள் கிடைக்காத வரைக்கும் இந்திரியங்கள் பல வகையில் அலைக் கழித்துத் துன்புறுத்தும். வெளிமுகமாக இருக்கும் நோக்கம் எல்லாம் அவன் அருளால் உள்முகமாக மாற வேண்டும். 233