பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தூங்கத் தொடங்கினால் இராப்பகல் அற்ற இன்பம் அதற்குக் கிடைத்துவிடும். இது படிப்படியாக வரவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாட்டில் வெளியிடுகிறார். அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும்; அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும்; கொடியஐவர் பராக்குஅறல் வேண்டும், மனமும் பதைப்புஅறல் வேண்டும்என்றால், இராப்பகல் அற்ற இடத்தே இருக்கே எளிதல்லவே. (பாம்பை அணியாக அணியும் சடைமுடியானாகிய சிவபிரானுடைய திருக்குமாரனாகிய முருகன் திருவருள் முதலில் வேண்டும்; அதனால் (விரிந்த அன்பு உண்டாகும்; அந்த அன்பினால்) குராமலரைப் புனையும் முருகனுடைய தண்டையை அணிந்த அழகிய திருவடியைத் தொழுதல் வேண்டும்; (அதன் பயனாக) ஐந்து இந்திரியங்களும் புறத்தே செல்லும் வெளிமுகப் பயணம் அறுதல் வேண்டும்; (அது காரணமாக) மனம் சலனம் இல்லாமல் இருத்தல் வேண்டும்; இவ்வளவும் நிகழ்ந்த பிறகே கைகூடும் என்று சொன்னால், இரவும் பகலுமாகிய சகல கேவலங்கள் அற்ற இன்ப நிலையில் இருத்தல் என்பது எளிய காரியம் அன்று. அருளால் அன்பு உண்டாக, அன்பால் தாள் தொழல் நிகழ, தொழு தலால் பராக்கு அற, பராக்கு அறுதலால் பதைப்பு அறும்; இவ்வளவும் ஒன்றன்பின் ஒன்றாகக் கை வந்த பிறகே இராப் பகலற்ற இடத்தே இருக்கும் ஜீவன் முக்தி நிலை எய்தலாகும் என்றபடி, வேணி - சடை, குராப்புனை தாள், தண்டையந்தாள், முருகனுடைய இளந்திருவுருவத்தை எண்ணியபடி பராக்கு - பராங் முகம். ஐவர் என்பது தொகைக் குறிப்புச் சொல்; மனமும் என்றது ஐவர் பராக்கறுதலாகிய இறந்ததைத் தழுவி நின்றது; உயர்வு சிறப்பும்மையாகவும் கொள்ளலாம். என்றால் - இராப்பகல் அற்ற இடத்தே இருக்கைக்கு முன் இத்தனையும் கைகூட வேண்டும் என்று சொன்னால். முருகனுடைய திருவருளால் அவன்பால் அன்பு உண்டாகி அவனைத் தொழுதலால் இந்திரியம் ஐந்தும் வெளிமுகப்படாமல் நிற்க மனம் லயமாகும் என்றும், அப்பால் இறைவன் அருள் இன்ப அநுபவம் கிடைக்கும் என்றும் இதனாற் புலனாகிறது.) கந்தர் அலங்காரத்தில் 74-ஆம் பாட்டு இது. 236