பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை போக்கிக் கொள்ளலாம் என்ற அரிய கருத்தை இருவேறு வகையில் சொல்கின்றன. நெஞ்சை நோக்கிக் கூறும் பாடல்கள் இரண்டும் (1,3), முருகனை முன்னிலைப்படுத்துவன மூன்றும் (2,5,6), உலகத் தாரை விளித்துரைப்பது ஒன்றும் (4), காலனை அறை கூவும் பாட்டொன்றும் (7) இப்புத்தகத்தில் வருகின்றன. பழனியை ஒரு பாட்டிலும் (1), திருத்தணியை இரண்டு பாடல்களிலும் (2,5) நினைப்பூட்டுகிறார். இறைவனுடைய வழிபாட்டு முறைகள் பலவற்றைச் சொல்லித் தருகிறார். அவன் உறையும் தலத்தின் திருநாமத்தைப் பலகால் சொல்லுதல், அப்படிச் சொல்வாரைப் பணிதல், அடி யாருக்கு இட்டு மிடித்தல், முருகா என்று இறைவன் திரு நாமத்தைக் கூறுதல், அவன் திருக்கோலத்தைக் கண்ணால் நாடுதல், கையால் தொழுதல், நாவாற் பாடுதல், அவன் பூங்கழலை நோக்குதல், தலையிற் சூடுதல், அவனைப் போற்றுதல், பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மிக் கூத்தாடுதல் ஆகியவற்றைச் சொல்கிறார். மகளிரைச் சேல்வாங்கு கண்ணியர் என்றும் தார்கொண்ட மாதர் என்றும் பந்தாடு மங்கையர் என்றும் குறிக்கிறார். மாகத்தை முட்டிவரும் கூற்றன், அந்தகன் என்று யமனைக் குறிக்கிறார். வெள்ளிமலை போலக் கால் வாங்கி நிற்கும் ஐராவதத்தின் மேல் வரும் இந்திரனையும், கோடாத வேதனையும், தாராகணம் எனும் தாய்மார் அறுவரையும் காட்டுகிறார். சிவபெருமானை முத்திக் கொடை வழங்கும் வள்ளற்பெருமானாகவும் இறை வியைப் பாகத்தில் உடையவராகவும் வருணிக்கிறார். உமாதேவி சிவபெருமானைப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணியாகவும் முருகனுக்குப் பால் அருத்தும் பெருமாட்டியாகவும் இருப்பதைப் புலப்படுத்துகிறார். செவ்வேளை அமராவதி காவலன், இளங்குமரன், உமை முலைப்பாலுண்ட பாலன், கந்தன், குமரன், கூர்கொண்ட வேலன், செய்யவேல் முருகன், பரம கல்யாணிதன் பாலகன், முருகன் என்று பாராட்டுகிறார். அவனுடைய பூங்கழலும் தண்டையும் அணிந்த திருத்தாளையும், அவன் திருக்கை வேலையும், சிறு வாளையும், அவன் உடை வாளையும், தோகைப் புரவியாகிய மயிலையும் இடையிடையே நினைக்கிறார். 243