பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 என்று சொன்னார். "இவையெல்லாம் நிறைவேறினால் அல்லவா இராப்பகல் அற்ற இடத்தில் இருக்க முடியும்? அது மிகவும் எளிய செயல் அன்றே என்று முடித்தார். பிறகு அவருக்கே இரக்கம் தோன்றியது. "இப்படிச் சொல்லி விட்டோமே! இந்த நெறிகள் மிகவும் துன்புற்று அடைய வேண்டியனவாயிற்றே! இதைக் கேட்டே அஞ்சுவார்களே யாவரும்' என்ற கருணை அவர் உள்ளத்தில் முதிர்ந்தது. உடனே எளிய முறைகளை அடுத்த பாட்டில் சொல்லத் தொடங்கினார். இது செய்ய வேண்டும் என்று முன்பு சொன்னவர், எளியனவாய் இருக்கின்ற இவை களைக்கூடச் செய்யவில்லையே என்ற வாய்பாட்டிலே இப் போது ஆரம்பிக்கிறார். "அப்படியெல்லாம் சொன்னேனே என்று அஞ்சாதே. இவ்வளவு எளிமையான வழிகள் இருக்க இவற்றைக் கூட நீ கவனிக்கவில்லையே! இவற்றை முதலில் செய். பின்பு முன்பு சொன்னவை எளிதில் நிறைவேறும்' என்று உற்சாக மூட்டும் முறையில் இந்தப் பாட்டை அடுத்தபடி வைக்கிறார். படிக்கின் றிலைபழ னித்திரு நாமம்; படிப்பவர்தாள் முடிக்கின் றிலை,முரு காஎன் கிலை:முசி யாமல் இட்டு மிடிக்கின் றிலை,பர மானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்சம் ஏது நமக்குஇனியே? நெஞ்சை நோக்கிக் கூறல் இன்று வந்து நாளைப் போகின்ற மக்களைப் பார்த்துச் சொல் லாமல் தம்மோடு உறவாகிய நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார். தம்முடைய நெஞ்சுக்குச் சொன்னாலும் மற்றவர்கள் இதனை உணர்ந்து பயன்பெற வேண்டுமென்றதுதான் அவர் கருத்து. பசுமாடு தன் கன்றுக்குப் பால் கொடுத்தாலும் அதன் பிறகு அதன் பாலை எல்லோரும் பயன்படுத்திக் கொள்வது வழக்கந்தானே? அதுபோல் நெஞ்சுக்குச் சொல்லும் வாயிலாக உலகிலுள்ள மக்களுக்கு அரிய கருத்தைத் தெரிவிக்கிறார். முருகப் பெருமானைத் துதி செய். அவனுடைய கோயிலுக்குச் சென்று சுற்று. அவனைத் தினமும் மலரெடுத்து அருச்சனை செய்து வழிபாடு செய்' என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் அப்படிக்கூடச் சொல்ல வில்லை. அவற்றைவிட மிக எளிய வழிகளைச் சொல்லுகிறார். 246