பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 “தில்லை தில்லை என்றாற். பிறவி இல்லை இல்லை என்று மறை மொழியும்" என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுவார். நந்தனார் தல தரிசனத்திற்கு முன்னாலே தலத்தின் பெயரைச் சொல்லியே ஆனந்தப்பட்டார். அந்த நிலைகூட நமக்கு வரவில்லையே என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார். படிக்கின்றிலை பழனித் திருநாமம்! தலங்களின் பெருமை பழனி என்ற ஊரின் பெயரைச் சென்னால் பல வகையான எண்ணங்கள் வரலாம். அங்கே நகரசபை இருக்கிறது. கச்சேரி இருக்கிறது. வியாபாரிகள் இருக்கிறார்கள். ஆனால் பழனி என்று சொன்னவுடன் நமக்கு அவை நினைவுக்கு வருகிறது இல்லை. நான் பழனிக்குப் போகிறேன்' என்று யாரேனும் ஒருவர் சொன்னால், அவர் ஏதோ விவகாரத்திற்காகவோ, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகவோ போகிறார் என்று எண்ணுவது இல்லை. பழனி என்றவுடனே நமக்கு ஆண்டவன் நினைப்புத்தான் வருகிறது. திருநெல்வேலியில் இருக்கும் ஒருவன், "நான் திருச்செந்தூர் போகிறேன்' என்று சொன்னால், 'அங்கே யாரேனும் உறவினர் வீட்டில் விசேஷமா?’ என்று கேட்பது வழக்கம் அன்று. 'அங்கே இப்பொழுது என்ன திரு விழா?' என்று கேட்போம். போகிறவனுக்குத் திருச்செந்தூரில் வேறு வேலை இருக்கலாம். ஆனாலும் திருச்செந்தூர் போகிறேன் என்று சொன்னால் முதலில் நமக்குச் செந்தில் ஆண்டவனுடைய நினைவுதான் வருகிறது. இந்த நாட்டில் எந்த ஊரைப் பார்த்தாலும் அங்கே கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுடைய வரலாற்றை அந்த ஊர்க்காரர் சொல்வார்கள். சில ஊர்களுக்குப் புராணம் இருக்கும். ஊரின் பெயரைச் சொல்லும்போதே அந்த ஊரின் பெருமை எல்லாம் தெரியும்படியாக அப்பெயர் அமைந் திருக்கும். மதுரை என்றால் மீனாட்சி நினைவுக்கு வருவாள். சுவாமி மலை என்றால் முருகன் நினைவுக்கு வருவான். அந்த இடங் 248