பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? ஐயப்படுபவர் உண்மையான பொருளிடத்தில் அன்பு வைத்தால் உண்மை யான இன்பம் கிடைக்கும் என்பதை நாம் நம்பாமல் இருப் பதற்குக் காரணம் என்ன? நமக்குள்ள ஐயம். ஒருகால் அது பொய்யாக இருந்தால் என்ன செய்வது என்ற ஐயம். இப்படி ஐயப்படுபவர்களுக்கு எந்தக் காலத்திலும் நன்மை கிடையாது. சம்சயாத்மா வினச்யதி என்பது பகவத் கீதை. கடைக்குப் போய் ஒரு மூட்டை அரிசி வாங்கிக் கொண்டு வருகிறோம். அது நல்ல அரிசியாகத்தான் இருக்கும் என்று நம்பியே வாங்கி வருகிறோம். 'அதில் நஞ்சு கலந்திருந்தால் என்ன செய்வது?’ என்று யாரும் நினைப்பதில்லை. நம் வீட்டுக் குழந்தை விளையாடப் போகிறது. அதன்மேல் கார் ஏறி இறந்து விட்டால் என் செய்வது? என்று யாரும் சந்தேகப்படுவதில்லை. ஒரு சிற்றுண்டிச் சாலைக்குப் போகிறோம். அங்கே இருக்கிற சிற்றுண்டி நல்லதா அல்லாததா என்று நாம் உண்டால்தான் தெரியும். அது நல்லது என்று தெரிந்தால்தான் உண்ண முடியும். அந்தச் சமயத்தில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு முன்னே அங்கு உண்டு வந்தவரைக் கேட்கிறோம். 'அங்கே சாப்பாடு நன்றாக இருக்குமா?" என்று கேட்டு, மிக நன்றாக இருக்கிறது" என்று அவர் சொல்ல, அதை நம்பி நாம் போய் உண்கிறோம். என்றும் நித்தியமாக இருக்கும் ஒன்றை அறியும் தகுதி நமக்கு இல்லை. அத்தகைய இன்பம் ஒன்று இருந்தால் அதை அடையவேண்டும் என்கிற ஆசை நமக்கு இருக்கிறது. ஆனால் அப்படி ஒர் இன்பம் உண்டென்று அதனை நன்றாக உணர்ந்த ஒருவர் சொன்னால் அவரது வார்த்தைகளில் நமக்கு நம்பிக்கை பிறப்பது இல்லை. உணவை உண்ணப் போகிறவன் முன்பு உண்டவனிடத்தில் கேட்டு அதில் நம்பிக்கை வைத்து உண்ண வேண்டியது எப்படி அவசியமோ, அப்படியே உயிருக்கு இன்பம் அளிக்கின்ற உணவைப் பற்றிப் பெருமக்கள் கூறிய சொல்லில் நாம் நம்பிக்கை வைக்கத்தான் வேண்டும். ஒருவர் இருவர் சொன்னால் சந்தேகம் உண்டாகும். எத்தனையோ காலமாக எத்தனையோ பெருமக்கள் கடவுள் உண்மையென்றும், அவரால் தான் உய்வு பெறவேண்டும் என்றும், அவருடைய திருவருள் 305