பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பும் இந்தப் பொருள்கள் எல்லாவற்றையும்விடச் சிறந்த பொருளாக இருப்பது பேரின்பமாகிய முத்தி. அந்த முத்தி அழியாதது; நித்தியமானது. பதமுத்தி என்றும், பாமுத்தி என்றும் இருவேறு முத்தியைச் சாத்திரங்கள் சொல்கின்றன. இந்திரன் முதலியோர் பதங்களில் இருந்து இன்புறுவது பத முத்தி. இறைவனோடு ஒன்றுபட்டுப் பரமானந்தப் பெருவாழ்வைப் பெறுவது பர முத்தி. இந்தப் பர முத்தியைச் சுத்த முத்தி என்று அருணகிரி நாதர் சொல்கிறார். அது நித்தியமான வாழ்வு ஆதலின், சுத்த நித்த முத்தி என்ற சிறப்பித்துப் பேசுகின்றார். இந்த முத்தியாகிய பெரிய செல்வத்தைச் சிவபெருமான் கொடுக்கிறான்; தியாகம் பண்ணு கிறான். அவன் அசஞ்சலமானவன்: அசையாதவன். அதனால் ஸ்தானு' என்ற பெயரை உடையவன். அசையாப் பொருளுக்கு மலையை உவமை சொல்வது ஒரு மரபு. இறைவன் மலையைப் போன்றவன். பர முத்தி ஆகிய பேரானந்தப் பெருவாழ்வைத் தியாகம் பண்ணுகிற சிவபெருமான் மலையைப் போன்றவன். சுத்த நித்தமுத்தி த்யாகப் பொருப்பை. திரிபுராந்தகன் தன்னை அண்டி அருள்பெற்றவர்களுக்கு நித்தியமான முத்திச் செல்வத்தை வழங்கும் வள்ளலாகிய அந்தப் பெருமான், தவறு செய்தவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதிலும் சிறந்தவனாக விளங்குகிறான். மூன்று புரங்களைத் தம்முடைய கோட்டை களாகக் கொண்டு எங்கும் திரிந்து உலகத்திற்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்தார்கள் மூன்று அசுரர்கள். அவர்களுடைய கோட்டைகளைத் திரிபுரம் என்று சொல்வார்கள். மூன்று மலங்களையே திரிபுரம் ஆக உருவகம் செய்தார்கள். 'முப்புரம் என்பது மும்மல காரியம்' என்பது திருமூலர் திருமந்திரம். மூன்று மலத்தின் உருவமாகிய அம்மூன்று புரங்களையும் இறைவன் எரித்தான்; திரிபுரங்களுக்கு யமனாக நின்றான் அவன். த்ரிபுராந்தகனை. 335