பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி கோச்செங்கட் சோழன் என்பவன் சங்ககாலத்தில் இருந்த ஒர் அரசன். அவன் பிறந்த கதையே மிகச் சுவை பொருந்தியது. அவனை அவன் தாய் கருவுற்றிருந்தாள். அவன் எந்த நேரத்தில் பிறந்தால் மிக்க புகழ் உடையவனாக விளங்குவான் என்று சோதிடர்கள் எல்லாம் சேர்ந்து ஆராய்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தால் அவன் சிறந்த அரசனாக ஆட்சி புரிந்து விளங்குவான் என்று சோதிடர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கச் செய்வது என்பது நம்மால் இயலுகிறது அல்லவே! ஆனாலும் மருத்துவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு காரியம் செய்தார்கள். இன்னும் ஒரு முகூர்த்தம் சென்று பிறந் தால் அவன் சிறந்தவனாக இருப்பான் என்று தெரிந்து, அதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தார்கள். கரு உற்றிருந்த அரசியைத் தலையைச் சற்றுத் தாழ்த்தியும், கால் மேலாக இருக்கும்படியும் படுக்க வைத்தார்கள். இப்படி, பிறக்க வேண்டிய நேரம் கழிந்து, உரிய வேளையில் பிறப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். தாய் வயிற்றில் சற்று நேரம் கடந்து இருந்தமையினால் அவன் பிறந்தபோதே இரு கண்களும் இரத்தம் குழம்பிச் சிவந்திருந்தது. அதனால் அவனுக்குக் கோச்செங்கட் சோழன் என்ற பெயர் வந்தது. இவ்வாறு ஒரு வரலாறு வழங்கி வருகிறது. சிவந்தியாக இருந்தவனே இறைவனை வழிபட்ட புண்ணியப் பேற்றால் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தான் என்று திரு வானைக்காப் புராணம், தேவாரம் முதலிய நூல்கள் சொல்கின்றன. கோச்செங்கட் சோழன் சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டினான். திருமாலையும் வழிபட்டான். அவன் கட்டிய கோயில்கள் தனிச் சிறப்புடையவை. மாடக் கோயில்களைக் கட்டினான். போன பிறவியில் யானையினால் தான் கட்டிய வலை சிதைந்தமையினால் இந்தப் பிறவியில் யானை ஏற முடியாத கோயில்களைக் கட்டினான் என்று சொல்வது உண்டு. அவன் எழுபத்திரண்டு கோயில்களைச் சிவபெருமானுக்கு எடுப்பித் தான் என்பதைத் திருமங்கையாழ்வாரே சொல்லியிருக்கிறார். "இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ரீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே." 35