பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி எண்ணத்தோடு வாழ்ந்தால் பலகாலம் வாழ்ந்த உடம்பாயிற்றே என்ற பற்று இருக்க நியாயம் இல்லை. பழைய காலத்திலாவது வீடு என்றும் ஊர் என்றும் பற்று இருக்கும். இந்தக் கால வாழ்க்கை அந்தப் பற்றைப் போக்கி விடுகிற முறையில் அமைந்திருக்கிறது. பழங்காலத்தில் ஏதேனும் ஒரு சிறிய ஊரில் நான்கு தெருவுக்கு அப்பால் ஒரு தெருவில் ஒருவன் செத்துப் போனாலும் ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் துக்கம் கேட்பார்கள். வீட்டுக்காரர்கள் ஒரு வருஷம் துக்கம் காப்பார்கள். ஒரு மாதம் முழுவதும் அழுது கொண்டிருப் பார்கள். நவீன நாகரிகத்தில் நகரங்கள் மிகுதியாகிவிட்டன. அதுவும் சென்னைப் பட்டினத்தில் பாருங்கள். இந்த வீட்டில் ஒரு பிணம் கிடக்கும்; அடுத்த வீட்டில் ஆண்டு நிறைவு நடக்கும். மரணம், மணம் ஆகிய இரண்டும் ஒரு தெருவில் அடுத்தடுத்து நிகழும். இங்குள்ளவர்கள் பற்றற்ற ஞானிகளைப் போலவே வாழ்வார்கள். இத்தகைய பற்றற்ற வாழ்வு நடத்தும் பழக்கம் நமக்கு உண்டாகியிருக்கும்போது தேகப்பற்றை விடுகிற பழக்கம் மட்டும் உண்டாகவில்லை. ... " "ஸ்டேஷன் மாஸ்டர்களைப் பாருங்கள். அவர்களுக்கு அடிக்கடி ஒர் ஊரில் இருந்து வேறோர் ஊருக்கு மாற்றலாகிறது. ஒருவர் தம்முடைய குடித்தனத்துடன் மாடு கன்றுகளுடன் ஒர் ஊருக்குப் போகிறர். அங்கே அவரோடு வேலை செய்கிற பல அன்பர்கள் வாழ்கிறார்கள். அந்த ஊரில் நடக்கும் காரியங்கள் அத்தனையிலும் கலந்து கொண்டு அவர் உறவாடுகிறார். அடுத்த ஆறு மாதத்தில் அந்த ஊரிலிருந்து இருநூறு மைலுக்கு அப்பால் உள்ள ஊருக்கு அவருக்கு மாற்றலாகிறது. போகிற ஊர் பழக்கம் இல்லாத ஊர் ஆயிற்றே என்று அவர் நினைப்பது இல்லை. பழகிய ஊரைவிட்டுப் போகிறோமே என்ற துயரமும் அவருக்கு அதிகம் உண்டாவதில்லை. எந்தச் சமயத்திலும் தம் சாமான்களை வண்டியில் போட்டுக் கொண்டு, தாமும் போவதற்குத் தயாராக இருக்கிறார். இதுவும் ஒரு விதமான ஞானம் என்றே நான் நினைப்பது வழக்கம். அதுபோல, இந்த உடம்பை விட்டுப் போவதற்கு நாம் தயாராக இருந்துகொண்டு இதனைப் பாதுகாப்போமானால் மரணத்தினால் நமக்குத் துயரம் உண்டாகாது. பெறுதற்கு அரிய 53