பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி பெற்ற சரசவல்லியாகிய தேவயானை வேறு ஒரு மலையைச் சார்ந்தாள். உயர்ந்த இடத்தில் பிறந்த பெண் தன் பிறந்தகத்திற்கு ஏற்ற பொருத்தம் உடைய இடத்தைத்தானே சேர்வாள்? ஆகை யால் ஒரு மலையில் பிறந்து மற்றொரு மலையைச் சேர்ந்தாள் என்று நயம்படச் சொல்கிறார் அருணகிரியார். அவள் பிறந்து வளர்ந்த இடம் சங்க்ராம சயிலம். அவள் படர்ந்து இறுகத் தழுவிய இடம் கடகாசலம்; வளையை உடைய மலை. போரிட்ட யானை சூரபன்மனுடன் சண்டை இடும்போது இந்திரனும் சண்டை செய்தான். முருகப் பெருமான் துணை இருந்ததனால் அவன் அஞ்சாமல் சண்டை செய்தான். தனியே சூரபன்மனை எதிர்ப் பதற்கு அவனுக்கு ஆற்றல் இல்லை. இறைவனாகிய தலைவன் அருகில் இருக்கும் தைரியத்தால் எல்லோருமே சண்டை செய்தார்கள். ஐராவதமும் தன்னுடைய ஆற்றலைக் காட்டியது. போருக்குப் பிறகு தேவயானையின் மணம் நடந்தது. ஆகையால் அந்தப் போரில் உண்டான காயங்களுடன் ஐராவதம் நின்றது. அருணகிரியார் அதை நினைப்பூட்டுகிறார். 'இப்போதுதான் போரில் புகுந்து மதம் பொழிகின்ற மத்தகத்தோடு எதிரிகளை எதிர்த்துப் போரில் பெற்ற அடையாளங்களுடன் இதோ நிற்கிறது ஐராவதம். இந்த ஐராவதத்தின் பெண்ணை எம்பெருமான் திருமணம் செய்து கொண்டான்' என்று நினைப்பூட்டுவதுபோல ஐராவதத்தைச் சங்க்ராம சயிலம் என்று குறிப்பிட்டார். வேறு நிகழ்ச்சியையும், வேறு அடையாளங்களையும் சொல்லியிருக் கலாம். ஆனால் தேவையானையின் திருமணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது போர். ஆகையால் இவ்வாறு சொன்னார். அந்தப் போரில் தேவர்களுக்கு வெற்றி கிடைத்தமையினால் நன்றி யறிவுக்கு அறிகுறியாகத் தேவயானையை இந்திரன் மணம் செய்து கொடுத்தான் என்பதை முன்பு பார்த்தோம் அல்லவா? முருகப் பெருமான் தேவயானையாகிய கொடியைத் தன் திருத்தோள்களின் மீது படர விட்டுக் கொண்டான். அந்தக் கொடி அதற்கு முன்னால் தளர்ந்து இருந்தது. அந்தக் கொடிக்கு ஏற்ற கொழுகொம்பாக இறைவன் அருள் புரிந்தான். 81.