பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் இந்தக் கெடுபிடிப் போரினால் எங்கும் ஐயமும், அவ நம்பிக்கை யும் குமுறிக் கொண்டிருக்கின்றன. தெய்வங்களின் ஆயுதங்கள் 'நம்முடைய தெய்வங்களின் கையில் ஆயுதங்கள் இருக் கின்றனவே, எதற்காக இந்தத் தெய்வங்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன? சக்கரபாணி, சூலபாணி, வேலாயுதன் என்று தங்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன?' என்று நமக்குச் சந்தேகம் வரும். தன் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஆண்ட வனுக்கு ஆசை இல்லை. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு காரியத்திற்கு அவன் ஆயுதம் எடுத்தவனாக இருக்கலாம். இராவணனை அழிக்க இராமன் கோதண்டம் ஏந்தினான். சூரனை அழிக்க முருகன் வேல் பிடித்தான். 'இராவணன்தான் அழிந்து விட்டானே. சூரன்தான் குலைந்துவிட்டானே. இப்போதும் கோதண்டபாணியாக, வேலாயுத பாணியாக அவர்கள் காட்சி அளித்துக் கொண்டிருப்பானேன்? என்று நமக்குத் தோன்றலாம். நமக்குக் கோதண்டபாணி வேண்டாம், சீதாராமன் இருந்தால் போதும்; வேலாயுதன் வேண்டாம்; வள்ளி மணவாளன் இருந் தால் போதும் என்றுகூடத் தோன்றலாம். அந்த மூர்த்திகள் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம், யாரோ ஒருவரைக் கொலை செய்வதற்கு அன்று. காலனை எண்ணிப் பயந்துகொண்டிருக்கிற ஆருயிர்களுக்கு, தெய்வம் நமக்குத் துணை யாக இருக்கின்றது என்ற தைரியம் உண்டாக வேண்டுமென்று அப்படி இருக்கிறார்கள். அந்த ஆயுதங்கள் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைப் போன்றன அல்ல. அவை சில உண்மைகளைப் புலப்படுத்தும் சின்னங்கள். அதற்காகவே அவற்றை ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். இராவணன் ஒரு காலத்தில் இருந்தான்; சூரன் ஒரு காலத்தில் இருந்தான் என்பது புராணம். ஆனால் அவர் களுடைய சந்ததிகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் அசுர சம்பத்துகள் உள்ளத்தில் தோற்றிக் கொண்டிருக்கின்றன. அவை அகப் பகைகள். புறப்பகைகளை விட அவற்றால் விளையும் தீங்கு மிகுதி. அதனால், 'அகப் பகைக்கு அஞ்சி நிலை குலைந்துவிடாதே; நான் இருக்கிறேன், 87