பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பெற்று அவன் அருளில் ஆழ்ந்து இன்புறும் அருள் நெறியில் பல பல நிலைகள் உண்டு. தனித்தனியான அந்த நிலைகளில் உள்ள வெவ்வேறு பக்குவத்தினருக்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு பாடல்களை அருளியிருக்கிறார். அலங்காரப் பாடல்கள் மிகப் பெரிய திருப்புகழ்ப் பாடல் களைப் போலின்றியும் மிகச் சிறிய அநுபூதிப் பாடல்களைப் போலின்றியும் நடுநிலையில் இருக்கின்றன. மனத்தில் தரிக்க எளியனவாய்ப் பொருள் விளங்குபவையாய் உள்ளன. ஆதலின் ஆண்டவன் சந்நிதியில் சென்று நின்றால் பொருளுணர்ந்து பாடி உருகலாம். பயன் பெறலாம். வீட்டிலிருந்து பாராயணம் செய்தும் நலம் பெறலாம். நம்முடைய மன இயல்புக்கு ஏற்றவண்ணம் சில பாடல்கள் மிக மிகச் சுவையாகத் தோற்றும். இலக்கியச் சுவையைச் சொல்லவில்லை. நம்முடைய பக்குவம் அறிந்து நமக் காகவே அமைந்தவை போல இருப்பதனால் நம் உணர்ச்சியை எளிதிலே கிளரச் செய்யும் இயல்பையே சொல்கிறேன். முருகன் அடியாராகிய ஓர் அன்பர் ஒரு நாள் என்னிடம் திருப் புகழ் முதலியவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களைச் சொல்லிக் கொண் டிருந்தேன். அப்போது அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்: 'திருப் புகழில் உயிர்நிலையான பாட்டு எது?’ என்றார். அவருடைய கேள்விக்கு உடனே விடை சொல்லவில்லை. சிறிது யோசித்தேன். 'உயிர்நிலைப் பாட்டு இன்னது என்பதை நம்மால் எப்படிச் சொல்ல முடியும்? அருணகிரிநாதரோ, ஆண்டவனே அல்லவா சொல்ல வேண்டும்?” என்று கூறினேன். “உங்களுக்கு எந்தப் பாடல் மிகவும் பிடித்தது? அதைத்தான் கேட்கிறேன்" என்றார். நான் சொன்னேன். அலங்காரம், அநுபூதி ஆகியவற்றிலும் எது எது அத்தகையது என்று கேட்டார். என் கருத்தைச் சொன் னேன். அந்தக் கேள்விகளையே அவரிடம் கேட்டேன். அவர் தமக்கு விருப்பமான பாடல்களைக் கூறினார். அந்தப் பாடல் களைச் சொல்லும்போது ஒரு தனியான இன்பம் உண்டாவதாகச் சொன்னார். நான் சொன்ன பாடல்கள் அல்ல அவை. அவர் சொன்ன அத்தனையும் வேறு.