பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நான்கு பக்கத்திற்கும் நாலாயிரம் கண் படைத்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு அவர் பேசுகிறார் என்று தோன்றுகிறது. நான்கு முகம் உடையவன் ஆதலின் நாலாயிரம் கண் படைத்திருக் கலாமே என்ற எண்ணம் எழுந்தது என்பது, நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று பிரமனை முகத்தின் எண்ணிக்கை கொண்டு சுட்டுவதால் தெரிய வருகிறது. பேரழகை உடைய ஆண்டவன், தேவர்களுக்குத் தலைவன், மேலானவனாகிய முருகன், சிவபெருமானுக்கு மைந்தன், மெய்ஞ் ஞான தெய்வம் ஆகிய அவன் மிகப் பெரியவனாக இருந்தாலும் அவன் அகத்தும் புறத்தும் ஈரம் மிக்க திருச்செங்கோட்டில் எழுந் தருளியிருக்கிறான். அவன் இயற்கையாக உள்ள இடத்திற்குச் சென்று கண்டு தொழுவது நமக்கு அரிதாகையினால் அவன் நம்மை நோக்கி இந்த மேதினிக்கே வந்திருக்கிறான். ஆனாலும் ஒரளவு முயற்சி செய்தால்தான் பெறுகின்ற பொருளின் பெருமை யும் மதிப்பும் தெரியும். அவன் இயல்பாக இருக்கும் இடத் திற்குச் சென்று காண்பதற்கு நமக்கு ஆற்றல் இல்லாவிட்டாலும், அவன் பாளையம் இறங்கிய இடத்திலாவது சென்று காணலாம். அதற்குரிய முயற்சி நமக்கு வேண்டும். அந்த முயற்சிக்கு ஏற்ற கருவிகள் நம்மிடத்தில் இருக்கின்றன. அவன் உள்ள தலத்திற்குச் செல்வதற்குக் காலும், அவன் திருக்கோலத்தைக் காண்பதற்குக் கண்களும், தொழுவதற்குக் கையும் இருக்கின்றன என்ற எண்ணங்கள் இந்தப் பாட்டினால் நமக்கு உண்டாகின்றன. ★ மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேல்.ஆர் வயற்பொழிற் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலாயிரம்கண் படைத்தில னேஅந்த நான்முகனே! 164