பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பொழுதே அவர்களிடையே காதல் தோன்றும். பின்பு அவர்கள் அடுப்பாரும் கொடுப்பாரும் இல்லாமல் அந்தக் காதலை வளர்த்துத் கொண்டு வருவார்கள். அதன் பிறகே காதலன் முயற்சி செய்து யாவரும் அறியக் காதலியைத் திருமணம் செய்துகொள்வான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்கள் ஒழுகும் ஒழுக்கத்தைக் களவொழுக்கம் என்று சொல்வர். அந்தக் களவுக் காதல் தமிழ் நூல்களில் சிறப்பாகப் பேசப்பெறும். மதுரையில் எழுந்தருளியிருக்கும் ஆலவாய்ப் பெருமான் களவியல் என்று அறுபது சூத்திரங்களால் ஒர் இலக்கண நூலை அளித்திருக்கிறான். களவுக் காதலைப் பற்றிய இலக்கணம் அதில் இருக்கிறது. கல்யாணம் ஆன பிறகு வாழும் வாழ்வு கற்பொழுக்கம் ஆகும். களவின் வழியே வந்த கற்பு என்றும், களவின்வழி வாராக் கற்பு என்றும் இரண்டு வகை உண்டு. அவற்றில் களவின் வழி வந்த கற்பே சிறந்தது. அதாவது, யாரும் அறியாமல் தனியே காதலர்கள் ஒன்றுபட்டு அப்பால் திருமணம் செய்துகொள்வதே சிறப்புடையதென்பது தமிழ் மரபு. முருகப்பெருமான்தமிழ்நாட்டினரால் போற்றப்படும் தெய்வம்; தமிழர் வாழ்விற்குச் சிறப்பு அருளும் பெருமான். அவன் களவு மணம், கற்பு மணம் ஆகிய இரண்டையும் செய்து கொண்ட ருளினான். தேவயானையைக் களவின் வழி வாராத கற்புத் திருமணம் செய்து கொண்டான். இந்திரனும் தேவர்களும் தேவ யானையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ள, அவன் அந்தப் பெருமாட்டியைத் திருப்பரங் குன்றத்தில் திருமணம் செய்து கொண்டான். இந்த வரலாறு கந்த புராணத்தில் வருகிறது. இந்த மணம் கற்பு மணம். வள்ளி மணம் களவு மணம் தமிழ்ப் பெருமாட்டியாகிய வள்ளிநாயகியை மணம் செய்து கொண்டது களவுக் காதல் முறை. அடுப்பாரும், கொடுப்பாரும் இல்லாமல் தானே வலிந்து சென்று அந்தப் பெருமாட்டியிடம் முருகன் காதல் செய்தான். ஆதலின் தமிழ் மரபுக்கேற்ற வகையில் அது அமைந்தது. தந்தையார் இலக்கணம் செய்யப் பிள்ளை யாகிய முருகன் இலக்கியமாக நின்றான். இந்தச் செய்தியைப் பழைய சங்க நூலாகிய பரிபாடலில் உள்ள ஒரு பாட்டிலே காணுகிறோம். 172