பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மேலும் அந்தக் களவுக் காமத்தின் சிறப்பைச் சொன்னவர், 'தள்ளாப் பொருள்இயல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளார்.இக் குன்று பயன்' - என்று கூறிப் பின்பு வள்ளி நாயகி களவுக் காதலால் சிறப்புப் பெற்றதைப் பாடுகிறார். இனி, அக்களவிற் புணர்ச்சியை உடை மையான் வள்ளி சிறந்தவாறும், அத் தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார் என்று பரிமேலழகர் இங்கே எழுதுகிறார். - இந்தச் சிறப்பான களவு மணத்தால் வள்ளிநாயகியை மணந் தமையால் இங்கே அருணகிரி நாதர் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமாகுலவனை என்றார். நல்ல களவு களவு கொண்டு வரும் செயல் பொதுவாகத் தவறுதான். ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று அது. ஆயினும் பிறர் பொருளை அவர் அறியாமல் கைக்கொள்ளும் களவுக்கும் இந்தக் களவுக்கும் வேறுபாடு உண்டு. களவில் நல்ல களவும் உண்டு. ஒருத்தி தன் கணவனோடு கோபித்துக் கொண்டு உயிரை விட்டுவிடத் துணிந்தாள். அதற்காக நஞ்சை வாங்கிப் பின்பு உண்போமென்று ஓரிடத்தில் மறைவாக வைத்திருந்தாள். அதனை அறிந்த அவள் தோழி அவள் அறியாமல் அதைக் களவில் எடுத்துச் சென்று கொட்டிவிட்டாள். அவள் செய்தது களவுதான். ஆனால் அதனால் நன்மைதான் விளைந்தது. நஞ்சுண்டு சாக எண்ணியிருந்த பெண்மணி அதை உண்டிருந்தால் உயிர் போயிருக்கும். ஆனால் அதனைக் காணாமல் வருந்திப் பிறகு சினம் ஆறி, ஆண்டவனே தன்னைக் காப்பாற்றினான் என்று ஆறுதல் பெற்றாள். இந்தக் களவினால் நன்மையே விளைந்தது. திருவள்ளுவர் வாய்மையைப் பற்றிச் சொல்லும்போது, 1. இப்புணர்ச்சியை வேண்டுகின்ற பொருள் இலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத்தைக் கொள்ளமாட்டார். 174