பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் அங்கே மிகவும் ஆழமான கிணறுகள் இருக்கின்றன. கிணற்றில் கயிற்றை விட்டுத் தண்ணீரை மொண்டு இழுக்க வேண்டும். இழுக்க இழுக்க மேலே கயிறு வந்துகொண்டிருக்குமேயன்றித் தண்ணீரைக் காண்பது எளிதன்று. ஆகையால் அதைக் 'கயிறு குறுமுகவை' என்று ஒரு புலவர் சொல்கிறார். - இப்படியுள்ள கிணறுகளில் தண்ணிரை எடுத்துப் பார்த்துக் கிடைக்காமல் துன்புற்றவன் அவன். இப்போது கண்ணுக்கு முன்னாலே மிக விரிவாகப் பெரிய பொய்கை தண்ணிர் நிரம்பிக் காட்சி அளித்தது. இத்தகைய நீர் நிலையை அவன் கண்டதே இல்லை. யாரும் தடுத்து நிறுத்தவில்லை. சுதந்தரத்துடன் பொய்கை யில் இறங்கிக் கை நிறைய மொண்டு, வாய் நிறையக் கொண்டு, வயிறு நிறைய உண்டான். இப்போது, இன்னும் கொஞ்சம் வயிறு குறைந்தால் தண்ணீரை எடுத்துப் பருகலாமே என்று அமர்ந்திருக் கிறான். இனிமேல் அவனுக்குத் தாகத்தைப் பற்றிக் கவலை யில்லை. வெப்பத்தைப் பற்றிய துன்பம் இல்லை. அவனைப் போலவே பல பேர் அந்தப் பொய்கையை அண்டி வந்து, நீரை மொண்டு உண்டு இருக்கிறார்கள். அமுதப் பொய்கை இது வெறும் பொய்கையைப் பற்றிய கதை. ஆனால் அந்தப் பொய்கை அமுதமாக இருந்தால் எப்படி இருக்கும்? நீர் வெறும் தாகத்தை மாத்திரம் தீர்க்கிறது. அமுதமோ பிறவிப் பிணியையும், பெருந்துன்பமாகிய இறப்பையும் போக்குவது. அது அமுதத்தி னாலே நிறைந்த பொய்கை. சுவை பொருந்திய அமுதம் பெற்ற பொய்கை இதுபோலக் கிடைப்பது அரிதுதான். தேவர்கள் பாற் கடலைக் கடைந்து கிடைத்த அமுதங்கூடப் பொய்கையாக இருக்கவில்லை; குடத்தில்தான் கிடைத்தது. அமுதப் பெருங்கடல் என்று சொல்வதற்குரியது அது. அது தான் இறைவன் திருவடி. அதனை அடைந்து அமுத பானம் பண்ண வேண்டுமென்று தொண்டர்கள் மிகவும் முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய லட்சியம் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டுமென்பதே. அந்த அடியோடு அன்பர்களுக்கு உள்ள தொடர்பு பல வகையானது. 185