பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 திருவடிச் சிறப்பு இறைவன் திருவடியை வெவ்வேறு வகையில் பல பெரிய வர்கள் பாராட்டியிருக்கிறார்கள். அது தேன்சொரியும் மலர் என்றும், ஞானமே திருவுருவமானது என்றும், மோட்சமே உருவாக இருப் பது என்றும் சொல்வார்கள். ஞானம் என்பது அறிவு; இறை வனைத் தெளிவிக்கும் அறிவு. இறைவன் திருவடியை நம்பினவர் களுக்கு முதலில் ஞானம் உண்டாகும். பின்பு அதன் பயனாகப் பேரின்ப அநுபவம் உண்டாகும். அறிவை உண்டாக்கத் துணை நிற்பது போலவே அநுபவத்தை உண்டாக்குவதற்கும் துணையாக இருப்பது அது. சாதனமாக இருக்கும்போது ஞானமாகவும், சாத்தியமாக இருக்கும்போது பேரின்ப அநுபவமாகவும் அது இருக்கும். ஒரு கம்பளியை வைத்துக் கொண்டிருக்கிறவன் வீட்டுக்குப் போகும்போது குளிருக்கு அதைப் போர்த்திக் கொண்டு போகிறான். வீட்டுக்குப் போனவுடன் அதையே படுக்கையாக விரித்துப் படுத்துக் கொள்கிறான். வழியில் துணை செய்ததும் அதுதான். வீட்டில் துணையாக இருப்பதும் அதுதான். அந்த வகையில் எம் பெருமான் திருவடி அன்பர்களுக்கு ஞானமாக முதலில் தோன்றி, பின்பு ஆனந்தமாக நிற்கும். இந்த இரண்டையும் அருணகிரிநாதர் சொல்கிறார். இப்போது பார்க்கப் போகும் பாடலில் அவன் திருவடி சுத்த ஞானமாக இருக்கும் என்று சொல்லப் போகிறார். வேறு ஓரிடத்தில், 'பொக்கக் குடிலில் புகுதாவகை புண்டரிகத்தினும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள்” என்று அந்தக் திருவடியையே வீடாகச் சொன்னார். எம் பெரு மானே ஞானத் திருவுருக் கொண்டவன். நீயான ஞான வினோதந்தனை என்று நீயருள்வாய் சேயான வேல் கந்தனே' என்று முன்பு ஒரு பாடலில் அருணகிரி நாதர் சொன்னதைப் பார்த்தோம். முருகனை, "ஞான பண்டித சாமி' என்று திருப்புகழில் பாடுவார். முருகன் ஞானமே உருவானவன் என்றால் அவன் திருவடி ஞானம் என்பதில் தவறு என்ன? கற்கண்டுக் கட்டியில் எந்தப் பகுதியும் இனிப்புடையதுதானே? 186