பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பெட்டியைக் கொண்டு வந்து சாவி போட்டுத் திறக்கிறோம். அந்தப் பெட்டிக்குள் பல அறைகள் இருக்கின்றன. நடு அறை ஒன்று இருக்கிறது. அதையும் திறக்கிறோம். அதற்குள்ளேதான் ரத்தினம் ஒரு கிழியில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் துணியை எடுத்து, முடிச்சை அவிழ்த்துப் பின்பு ரத்தினத்தை எடுத்துக் கொள்கிறோம். பெட்டி ரத்தினம் உடையதாக இருந்தாலும் அதனைத் திறந்து, அறையையும் திறந்து, முடிச்சையும் அவிழ்த்த பிறகுதான் ரத்தினத்தைக் கையில் எடுத்துக் காண முடியும். அவ்வாறே, படிப்படியாக நம் சாதனம் உயர வேண்டும். கோயிலில் ஆண்டவன், திருவடியுடன் கூடிய உருவத்தோடு நமக்கு இன்பம் தருகின்ற நிலையில் விளங்கினாலும் அவனைத் தரிசிக்கும் முறையில் தரிசித்து இன்பம் அநுபவித்தவர்கள் சிலரே. கோயிலை மாத்திரம் தரிசித்து வருபவர்கள் பலர். கோயிலைத் தரிசித்து இறைவன் திருவுருவத்தையும் கண்டு வருகிறவர்கள் சிலர். திருவுருவத்தைப் பார்ப்பதோடு திருவடியைக் கண்டு வருகிறவர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தாம்! கண்டு, மொண்டு அகக்கண்ணிலே தேக்கிப் பேரின்ப அநுபவத்தைப் பெறுகிறவர் எங்கோ லட்சத்தில், கோடியில் ஒருவர். கோயிலுக்குப் போவது, திருவுருவத்தைப் பார்ப்பது, திருவடியைக் கண்டு தரிசிப்பது, திருவடியைப் புறக்கண்ணிலே காண்பதோடு அகக் கண்ணிலே காண்பது என்பவற்றில் ஒவ்வொன்றும் அடுத்ததற்குப் படியாக இருக்குமானால் அந்த முயற்சிக்குப் பலன் உண்டு. அருணகிரிநாதப் பெருமான் முருகனிடத்தில் வேண்டுகிறார். 'எம்பெருமானே! எனக்குத் தொண்டர்கள் காணுகின்ற புண்ட ரிகத்தைத் தர வேண்டும். அவர்கள் கண்டு அண்டுகின்ற தண்டை யம் புண்டரிகத்தைத் தர வேண்டும். கண்டு அண்டி மொண்டு இருக்கிற ஞானம் எனும் தண்டையம் புண்டரிகத்தைத் தர வேண்டும். கண்டு, அண்டிமொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானம் எனும் தண்டையம் புண்டரிகத்தைத் தரவேண்டும்' என்று படிப்படியாக அடுக்கிக் காண்பதற்கு ஏற்றபடி பாடுகிறார். தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானம்எனும் தண்டையம் புண்டரிகம் தருவாய். 196