பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை அவன் சூரசங்காரம் செய்த வீரச் செயலை வருணிக்கிறார் அருணகிரியார். அண்டமுகட்டைப் பிளந்து வளர்ந்து இந்திர லோகத்தையும் எட்டிப் பொருதான் சூரன்; அவனை அஞ்சச் செய்தான் முருகன். முருகன் மயிலின் மேல் ஏறின அளவிலே சூரன் தளம் முறிந்ததாம். வேலை வாங்கி விட்டவுடன் எட்டு மலைகளும் வழிவிட்டனவாம். காக்கையும் கழுகும் போட்டி போட்டுக் கொத்த, பேய்கள் கூத்தாட அசுரர்களைக் கொன்றது, அவன் விட்ட விக்ரம வேலாயுதம். அவனுடைய வீரச் செயலால் அண்டர் சிறை மீள்கின்றனர்: குமரா சரணம் சரணம் என்று துதிக்கின்றனர். சூரபயங்கரன், இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள், மைவரும் கண்டத்தர் மைந்தன், கந்தன், குறத்திபிரான், வேலாயுதன், கந்தச்சுவாமி, காலாயுதக் கொடி யோன், குமரன், அமராவதியிற் பெருமாள், நிர்மலன் என்று முருகனைச் சொல்கிறார். ★ 大 女 தேனாம்பேட்டை முருகன் திருக்கோயிலில் வாரந்தோறும் வியாழனன்று கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் செய்து வந்தேன். அந்நூல் நிறைவுபெற்று அப்பால் கந்தர் அநுபூதிக்கு விளக்கவுரை சொல்லி வந்தேன். அந்த நூலும் நிறைவேறியது. என் சொற்பொழிவுகளைப் பொறுமையுடன் சுருக்கெழுத்தில் எடுத்து உதவியிருக்கிறார் என் உழுவலன்பர் சிரஞ்சீவி அனந்தன். அவர் பின்பு தட்டெழுத்தில் மாற்றித் தந்த அந்தச் சொற்பொழிவு களை ஒரு முறை பார்த்துச் செப்பஞ் செய்து புத்தக வடிவில் வெளியிடத் தொடங்கினேன். சொற்பொழிவுகள் முடிந்தும் இந்த நூல்வரிசை இன்னும் நிறைவுறாமல் இருப்பதற்கு என் குறையே காரணம். பல அன்பர்கள் இந்த அலங்கார மாலை எப்போது நிறை வெய்தும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள் என்பதை எளியேன் அறிவேன். சிற்றறிவும் வரம்பிலடங்கிய சிறிய ஆற்றலுமுடை யவன் ஏழையேன் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன். முருகன் திருவருள் துணை நின்று இந்த மாலையை நிறை வேற்றுவிக்க வேண்டும்.