பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் செய்தது. 'கேட்டதுவே" என்று மட்டும் இந்தப் பாடலில் அருணகிரியார் சொல்கிறார். ஆயினும், இந்தக் கிண்கிணி ஒசையைக் கேட்ட உயிர்கள் எல்லாம் நம்மைப் பாதுகாக்கும் நாயகன் வந்துவிட்டான் என்று எண்ணி உள்ளம் தளிர்த்தன என்பதை இதனால் பெறும் குறிப்பாகக் கொள்ள வேண்டும். முருகப்பெருமான் திரு அவதாரம் செய்தவுடனே தன் னுடைய வீரத்தையும் அருட் பெருக்கையும் காட்டிக் கொண் டான் என்பது இதன் கருத்து. - மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசைஅந்த விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது; வேல்எடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருஅரையில் கிண்கிணி ஓசை பதினா லுலகமும் கேட்டதுவே. (மண்வாசனை வீசுகின்ற திருவயிற்றை யுடைய திருமாலாகிய கண்ணபிரான் ஊதிய வலம்புரிச் சங்கின் முழக்கம் அந்த வானுலக மெல்லாம் மணம் கமழும் கற்பகச் சோலையிலும் வாவியிலும் கேட்டது; வேலைக் கையில் ஏந்தித் திண்மையான மலைகள் குலையும்படி திருவிளையாடல் புரிந்த இளங்குழந்தையாகிய முருகனது அழகிய இடையிலுள்ள கிண்கிணியின் ஒசை பதினான்கு உலககமும் கேட்டது. உந்தி - வயிறு. விண் - தேவர் உலகம். பிள்ளை என்று பொது வகையிற் சொன்னாலும் வேலெடுத்து என்ற சிறப்பினால் முருகன் என்பது தெளிவாயிற்று. அரை - இடை) இது கந்தர் அலங்காரத்தில் 93ஆவது பாட்டு. 215