பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் ஜூன் மாதமும் இலங் கைக்குப் போயிருந்தேன். யாழ்ப்பாணத்திலும், கொழும்பு முதலிய பிற இடங்களிலும் பல சொற்பொழிவுகள் ஆற்றினேன். அங்குள்ள அன்பர்களின் முருக பக்தியை என்னென்று சொல்வது யாழ்ப் பாணத்தில் எங்கே பார்த்தாலும் முருகன் கோயில்கள்; கந்தசாமி கோயில் என்றே அங்கே வழங்குகிறார்கள். இந்த வழக்கை அறிந்தபோதுதான் கந்தசாமி என்னும் திரு நாமத்தின் பெருமையை நன்கு உணர்ந்தேன். வட மொழியில் ஸ்கந்த என்று உள்ள சொல்லே தமிழில் கந்தன் என்று வந்தது. வட மொழியில் ஸ்கந்தோபநிஷத், ஸ்காந்த புராணம் என்று நூல்கள் இருக்கின்றன. தமிழிலும் முருகனுடைய வரலாற்றைச் சொல்லும் நூலுக்குக் கந்தபுராணம் என்று பெயர். முருகனுடைய அஷ்டோத்தரம் ஸ்கந்தாய நம: என்று தொடங்குகிறது. இவை மட்டும் அன்று; முருகனுடைய திருவருளில் ஊறித் திளைத்து மற்றவர்களும் அதனைப் பெற வேண்டும் என்ற இணையற்ற கருணையினால் திருப்புகழ் முதலிய அற்புதமான நூல்களை வழங்கிய அருணகிரிநாத சுவாமிகள் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி என்று தம்முடைய நூல்களுக்குப் பெயரிட்டிருக்கிறார். 'வேலாயுதன்சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன் அறியாச் குலாயுதன்தந்த கந்த சுவாமி” என்று கந்தசுவாமி என்ற திருநாமத்தைக் கந்தர் அலங்காரத்தில் பதித்திருக்கிறார். இவற்றால் கந்தசாமி என்ற திருநாமத்துக்குத் தனிச் சிறப்பு உண்டென்பது புலனாயிற்று. அந்த எண்ணம், யாழ்ப்பாணத்தில் எங்கு நோக்கினும் கந்தசாமி கோயில்கள் இருப்பதைக் கண்டும், அவற்றை வேறுவிதமாகக் குறிக்காமல் கந்தசாமி கோயில் என்றே குறிப்பதைக் கேட்டும் வலிபெற்றது.