பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி இளம் பருவத்தில் ஒரு மனிதன் கல்வி கற்கிறான்; பல உறவினர்களோடு பழகுகிறான்; பொருளைச் சேர்த்துக் கொள் கிறான். பிற்காலத்து வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் அவன் கல்வி, செல்வம், ஆற்றல் முதலியவற்றைச் சேகரித்துக் கொள்கிறான். அந்த இளம் பருவத்திற்கும், பின்னாலே வருகிற பருவங்களுக்கும் தொடர்ச்சி இருக்க வேண்டும். ஒரு பருவத்திற்கும், மற்றொரு பருவத்திற்கும் தொடர்ச்சி இல்லாவிட்டால் அவனுடைய வாழ்க்கை நன்கு அமையாது. கண்ட கண்ட இடங்களில், கண்ட கண்டபடி எல்லாம் வாழ்கிறவர்களுக்கு நிலையான வாழ்க்கை இல்லை. வாழ்வில் பிற்காலம் நன்றாக அமைய வேண்டுமென்ற எண்ணத் தோடு, அறிவு வந்தது முதல் எவன் திட்டவட்டமாகத் தன்னுடைய செயல்களை வரையறை செய்துகொண்டு அதற்கேற்ற பயிற்சியை அமைத்துக் கொள்கிறானோ, அவன்தான் நன்கு வாழ முடியும். பிற்காலத்து வாழ்வுக்கு ஏற்ற திட்டங்களை வகுத்துக் கொள்கிற வர்கள் அந்த வாழ்க்கையின் பயன் இன்னது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத்தான் லட்சியம் என்றும் குறிக்கோள் என்றும் சொல்வார்கள். குறிக்கோளைப் பற்றிச் சென்ற பாட்டில் நாம் பார்த்தோம். வாழ்க்கையின் தொடர்ச்சி இந்த வாழ்க்கையின் முடிவு எத்தகையது என்று நமக்கு ஒரளவு தெரியும். மரணத்தில் முடிகிறது இந்த வாழ்வு. நன்றாக வாழவேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இளம் பருவத்தில் முயற்சி செய்கிறவன் அதனுடைய பயனைப் பின் பருவத்தில் பெறுகிறான். முன் பயிற்சி செய்த மனம் பின்னாலே தொடர்ந்து வருகிறது. என்ன என்ன வகையான பயிற்சி அவனுக்குக் கிடைக்கிறதோ, யார் யார் உறவு அவனுக்கு உண்டாகிறதோ அவற்றுக்கு ஏற்றபடி அவன் வாழ்வு ஆரம்பமாகிறது. இது ஒரு பிறவியில் அமைகிறது.