பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் அப்படிச் செய்யும்போது அவன் கை சோரலாம்; இடையிலே பல தடைகள் உண்டாகலாம். அவற்றைப் போக்கும் உரன் வேண்டும். மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். சிறிதும் சலிக்காமல் சளைக்காமல் முன்னேறினால், சரியான நெறியில் முன்னேறினால், அவனுக்குக் கரை புலனாகும். வெறும் கற்பனையாகக் கரையைப் பற்றி எண்ணமிட்ட அவனுக்கு அதன் உண்மை தெளிவாகும். அது கண்களில் பட்டுவிட்டால் பின்பு அவனுடைய ஆர்வமும் ஊக்கமும் பல பல மடங்கு மிகுதி யாகும்; முயற்சியும் உரனும் பெருகும். கடைசியில் கரையையே அடைந்துவிடுவான். இப்போது நாம் நடுக்கடலில் இருக்கிறோம். முத்திக் கரையைச் சேர வழி தெரியாமல் திகைக்கிறோம். இறைவனை அணுக வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நமக்கும் அவனுக்கும் நெடுந்துரம் என்று தெரிகிறது. மெல்ல மெல்ல முயன்றால் எதையும் சாதித்துவிடலாம். இன்ன இன்ன படி முயல வேண்டும் என்றும் ஆன்றோர்கள் அறிவுறுத்தியிருக் கிறார்கள். நான்கு படிகள் இறைவனை அடைவதற்கு நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தாண்டி முடிவில் இறைவனென்னும் பொருளை - இன்பமயமாக அவன் இருக்கும் இடத்தை - அடைய வேண்டும். படியை வடமொழியில் சோபானம் என்பார்கள். பரமபத சோபான படம் என்ற ஒரு படத்தை வைத்து விளையாடு கிறோம் அல்லவா? அந்தப் படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏணிகளில் ஏற வேண்டும். நடுவிலே பாம்பின் வாயிலே விழுந் தாலும் மறுபடியும் முயன்று மெல்லச் சென்று ஏணிப் படிகளில் ஏறிப் பரமபதத்தை அடைய வேண்டும். அதுபோலவே நான்கு பெரிய சோபானங்களை ஏறி இறை வனாகிய லட்சியத்தை நாம் அடைய வேண்டும். நாம் இருக்கும் நிலையைவிட அந்த இன்ப நிலை உயர்ந்தது. உயரமான இடத் துக்குப் படி கட்டி ஏறிப் போவது உலக வழக்கம். அதனால் முத்தியின்ப நிலையை அடையும் வழிகளைச் சோபானம் என்றார்கள். 13