பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி 'கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.' (குறள்) வார்த்தைகளைக் கேட்கும் ஆற்றல் உடையவனானாலும் அறிந்தவர்பால் கேள்வி பெறாதவன் செவிடனுக்கு ஒப்பானவன். கேள்வியின் வகை காதில் விழுகிறது எல்லாம் கேள்வி ஆகாது. செவிடன் ஒருவன் ஒரிடத்தில் நிற்கிறான். அப்போது வெடி ஒன்று வெடிக்கிறது. அவன் செவிடன் ஆகையால் வேட்டின் ஒலியை அவன் காது கேட்பது இல்லை. ஆனால் கண் உடையவன் ஆகையால் புகையைப் பார்க்கிறான். 'இது என்ன புகை?" என்று கேட்கிறான். வெடி வெடித்தால் காதினாலே கேட்பதற்கு ஒலியும், கண்ணினாலே பார்ப்பதற்குப் புகையும் இருக்கின்றன. ஆகையால் அந்த வெடியின் அநுபவம் இரண்டு இந்திரியங்களைச் சாருகிறது. கண்ணும், காதும் நன்றாக இருப்பவன் வெடியின் அநுபவத்தை முழுவதும் பெறுகிறான். காது இல்லாதவன் அரைப் பாகத்தைப் பெறுகிறான். அதுமாதிரியே ஒலி மாத்திர மாக இருக்கிறவற்றைத் தெரிந்துகொள்ளும் காது பாதிக் காது. நல்லவர்களுடைய சிறந்த உபதேசங்களைக் கேட்கும் காது முழுக் காது. ஒருவன் பிரஞ்சு மொழியில் பேசுகின்றான். அது காதில் விழுகிறது. ஆனால் அதனால் என்ன பயன்? நம்முடைய காது அந்த ஒலியை மாத்திரம் கேட்கிறது. அதன் பொருளை நாம் தெரிந்து கொள்வது இல்லை. காதிலே ஒ.சி விழுவதனால் மாத்திரம் பயன் இல்லை. அதன் கருத்தை உணர்ந்து நாம் அறிவு பெற வேண்டும். அறிவு பெறுவதற்குரிய நல்லவற்றைக் கேட்பதுதான் கேள்வி; அதைச் செவிச் செல்வம் என்பார் திருவள்ளுவர். காது இருந்தும் புரியாத மொழியைக் கேட்டால் அது செவிட்டுக் காதுக்குச் சமானமாகிறது. செவிட்டுக் காதைவிட அது ஒரு பங்கு உயர்வானாலும் இரண்டுக்கும் வேறுபாடு சிறிதுதான். ஒன்று ஒலியையே கேட்பதில்லை. மற்றொன்று ஒலியை மாத்திரம் கேட்கிறது. இதற்கு அடுத்தபடி ஒன்று உண்டு. பொருள் தெரிந் தாலும் நமக்கு நலம் தருகிற பொருளைக் கேளாமல் வேறு எதையெதையோ கேட்டுக் கொண்டிருந்தால் நம் காது முழுப் பயனைப் பெற்றதாக அமையாது. - 253