பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி தனியாக இருக்கிற இடம் எங்கே என்று ஆராய்வதில் பயன் இல்லை. நீ மற்றவருடன் உறவு இல்லாமல், தொடர்பு இல்லாமல், தனியாக இருக்கிறாயா என்று அவன் ஆராய்ந்து பார்க்கிறான். நீ தனி நின்றால் அவனே அங்கே வந்து இன்பம் தருவான்' என்று சொல்வது போல அருணகிரியார் உபதேசம் செய்கிறார். தனிமைக்குத் தடை 'தனியாக இடம் ஒன்று இருக்கிறதா? அது எனக்குத் தெரியவில்லையே!” என்றும், 'அந்த இடத்திற்கு எப்படிப் போவது?' என்றும் நாம் கேட்கிறோம். அதற்கு விடை அளிப்பார் போல அருணகிரியார் சொல்கிறார். "ஆம், அப்படி ஒர் இடம் இருக்கிறது. ஆண்டவன் தனி வெளியில் இருக்கிறான். அவனை நிச்சயமாகச் சந்திக்கலாம். ஆனால் அந்த இடத்திற்குப் போவதற்கு முன் நீ தனியாக வேண்டும். உன்னிடம் இரண்டு பேர் எப்போதும் கூட இருக்கிறார்கள் என்பது போல இந்தப் பாட்டைச் சொல்கிறார். வெளியில் நட்பாடுவதற்காக ஓர் அரசன் வந்து நிற்கிறான். வேறு ஒருவன் கோட்டைக்குள் இருக்கிறான். அவனை வெளி யில் இருப்பவன், நான் உனக்கு நன்மை செய்கிறேன்' என்று ஆர்வத்தோடு அழைக்கிறான். ஆனால் உள்ளே இருப்பவனுக்குத் தடையாகக் கோட்டையும் அதைச் சூழ்ந்த அகழும் இருக்கின் றன. இந்த இரண்டும் வெளியில் இருப்பவனையும் உள்ளே இருப்பவனையும் இணைய மாட்டாமல் தடுக்கின்றன. பூட்டிய கோட்டையும், பாலம் இல்லாத அகழியும் இருப்பதனால் அந்த இரண்டையும் அடியோடு தகர்த்தும், துர்த்தும் வெளியில் இருப் பவன் உள்ளே போக வேண்டும்; அல்லது உள்ளே இருப்பவன் வெளியில் இருப்பவனோடு சேர வேண்டும். வெளியில் இருக்கும் மன்னனோடு உள்ளே இருக்கும் சிறைப்பட்ட மனிதன் சேர்ந் தால் இன்பம் உண்டாகும். சேருவதற்குத் தடை இரண்டு. அவன் எத்தனைதான் ஆர்வம் படைத்திருந்தாலும் வெளியில் உள்ளவன் எத்தகைய ஆற்றல் உள்ளவனாக இருந்தாலும் இந்த இரண்டு தடைகளும் நீங்காத வரையில் அவர்கள் சந்திக்க முடியாது. 259