பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு உள்ளத்துக்கும் உயிருக்கும் உள்ள ஒற்றுமை மனத்திற்கும் உயிருக்கும் வேறுபாடு தோன்றுவது இல்லை. சில சமயங்களில் உயிர் என்ற பொருளில் உள்ளம் என்ற சொல்லைச் சித்தாந்த நூல் பயன்படுத்துகிறது. "நான் பதைக்கிறேன்" என்பதை, "என் மனம் பதைக்கிறது” என்று சொல்வதும் ஒரு சம்பிரதாயம். தனக்கும் மனத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை யொட்டித் தன்னுடைய அநுபவங்களை மனத்தின் அநுபவமாக்கிச் சொன்னார் என்று சொல்லலாம். மேலே உயர்ந்திருக்கிற பந்தரில் கீழே வாடிப் பதைக்கின்ற கொடி தானாகவே ஏற முடியாது. பந்தருக்கும், பூமிக்கும் இணைப்புப் போல ஆண்டவனுடைய திருவருள் வரவேண்டும். ஆண்டவனுடைய திருவருளுருவமாக இருக்கிற திருவடியை எண்ணுகிறார். ஆண்டவனுடைய திருவடி, பூமியில் நடந்து இங்கேயுள்ள குழந்தைகளை எல்லாம் பற்றிக்கொள்ளச் செய்து மேல் நிலைக்கு ஏற்றுவது. திருவடி காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருள்வாய் என்று வேண்டுகிறார். ஆண்டவனுடைய செங்கமலப் பாதம் மக்களை உயர்ந்த நிலைக்கு ஏற விடுவது. பிறவிப் பெருங்கட லுக்குப் புணையாக உதவுவது அது. ஆண்டவனுடைய பாதம் பூமியில் பதிகின்றது. பொதுவாகத் தேவர்களுடைய பாதம் மண் ணில் பதியாது என்று சொல்வார்கள். அவர்கள் வானுலகத்தில் வாழ்கிறார்கள். இறைவனோ தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவன். அவனுக்கும் திருவடி நிலத்தில் பதியாமல் இருப்பதே இயல்பு. ஆனால் அவன் பூமியிலுள்ள உயிர்கள் வாழ வேண்டு மென்று கருதிப் பூமியில் திருவடி வைத்து நடக்கிறான். நமக்கு அவனுடைய திருவுருவம் முழுவதையும் கண்டு அறிவதற்குரிய ஆற்றல் இல்லை. நேரம் இல்லை. நமக்கு அண்மையில் இருப்பது அவன் திருத்தாள் தான். 'வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனநின் பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ' 315