பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு ஆண்டவன் சென்று பொருதான். இதற்கு முன்பு அசுரேந்திரனாக இருந்த அவன் இறைவனுடைய வேலினால் கிழிக்கப்பெற்று இரண்டு கூறாக ஆனான். ஒரு கூறு சேவலாகவும், மற்றொரு கூறு மயிலாகவும் ஆயின. மிகவும் கொடுமையான எண்ணமுடைய சூரன், பார்த்தாலே அஞ்சுவதற்குரியவனாகிய சூரன், எம்பெரு மானது வாகனமாகிவிட்டான். இறைவனது திருவடித் தொடர்பு பெற்றவுடன் அவன் வன்மை மாறிக் கொடுமையும் மாறி அசுரத்தனம் அடியோடு ஒழிந்து இறைவனுக்கு ஏற்ற வாகனமாகி விட்டான். அந்த வாகனம் தூயதாகி, தோகையுடையதாகி, அழகோடு நிற்கிறது. மிக உயர்ந்த பெருமையை அந்த மயில் பெற்றுவிட்டது. இயல்பாக அசுரேந்திரனாக இருந்தபோது சூரனுக்கு இத்தனை பெருமையில்லை; பழியே இருந்ததது. ஆண்டவன் கழலுடன் சேர்ந்த பிறகே இந்தப் பெருமை அவனுக்கு உண்டாயிற்று. மிகமிகக் கொடியவர்கள் அசுரர்கள். அந்தக் கொடியவர்களுக்குள்ளே தலைவன் சூரன். கொடியவர் களுக்குத் தலைவனாகிய அவன் ஆண்டவன் திருக்கழலுடன் சேரும் பேறு பெற்றதும் அவனுக்குரிய வாகனமாகிவிட்டான். 'தீயவை செய்தா ரேனும் குமரவேள் திருமுன் புற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவார் என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் அந்நாட் செய்த மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்' என்று கச்சியப்ப சிவாசாரியார் பாடுகிறார். சூரன் கொடியவனாக இருந்தாலும் ஆண்டவனின் தொடர்பு பெற்றதால் அவன் தீமை மாறி உயர்ந்த பெருமையைப் பெற்றான். இறைவனோடு தொடர்பு பெற்றால் தீமை மாறி, அழுக்கு ஒழிந்து, மெய்யான பெருமையைப் பெற்று, இன்பத்தை அடைவார்கள். ஆகவே ஆண்டவன் கழலாகிய கொழுகொம்பில் ஏறினால் மிக உயர்ந்து படரலாம் என்பதற்கு மயில் சிறந்த சாட்சியாக நிற்கிறது. அந்த மயிலை உடையவனிடத்தில் விண்ணப்பித்துக் கொள்கிறார். தூவிக் குலமயில் வாகனனே! தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாத தனிக் கொடிபோல உலகத்தில் உழல்கின்ற ஒருவர், துணை இல்லாமல் வாடித் தள்ளாடிப் பதைபதைத்து, 'எம்பெருமானே, உன்னுடைய 321