பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 - அதாவது அவருடைய அநுபவச் சிறப்பை - எடுத்துத் காட்டுவனவாகவும் உள்ளன. முதல் பாட்டிலும் முடிவுப் பாட்டிலும் இறைவன் அருளால் தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்லி, 'இந்த அற்புதத்தை என்பால் நிகழ்த்தினான் ஆண்டவன், அவன் அருளின் பெருமை இருந்தவாறு என்னே!" என்று வியக்கிறார். அருணகிரியார் பாடல் களில் இந்த அநுபவ அதிசயப் பெருக்கைப் பல இடங்களிலே காணலாம். 'அத்தனெனக் கருளியவா றார்பெறுவாரச்சோவே' என்று மாணிக்கவாசகருக்கும் இந்த அதிசய உணர்ச்சி ஏற்பட்டது. அருணகிரியார், "இப்படி நிகழ்ந்தது பெரிய ஆச்சரியம்' என்று சொல்வதில்லை; "இப்படி நிகழ்ந்தவாறு என்னே!' என்றுகூடச் சொல்வதில்லை. வியப்பில் மூழ்கியவர் தாம் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல், கேட்பவர்கள் உய்த்துணரும்படி வைப்பது இயல்பு. அப்படி, "நிகழ்ந்தவா!' என்று சொல்லித் தம் அதிசய உணர்ச்சியைக் காட்டி நிறுத்துவது அருணகிரியாருக்கு வழக்கம். ஒரு வகையில் இப்படி வரும் இடங்கள் அருணகிரி யாரை இனம் கண்டு கொள்ளும் முத்திரை உள்ள பாடல்கள் என்று கூடச் சொல்லிவிடலாம். 'தெளிய விளம்பியவா முகம் ஆறுடைத் தேசிகனே!" (8) "சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனைவிட்டவா (10) "புரையற்ற வேலவன் போதித்தவா!' (61) என்பன கந்தர் அலங்காரத்தின் இடையே வருவன. 'பிரமம் கெடமெய்ப் பொருள்பே சியவா' (8) 'போகா வகைமெய்ப் பொருள்பே சியவா' (11) 'உரிதா உபதே சம்உணர்த் தியவா’ (20) 'தாளைப் பணியத் தவம்எய் தியவா' (22) என்று கந்தர் அநுபூதியிலும் இவ்வாறே வியப்பைக் காட்டுகிறார். அநுபவாதிசயம் இத்தகைய அநுபவாதிசயப் பெருக்கை அலங்காரத்தின் முதற்பாட்டும் நூறாவது பாட்டும் புலப்படுத்துகின்றன. 326