பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை போன்ற கேள்விகளை எழுப்பி ஆராய்ந்து உண்மை காண வேண்டும். இந்த ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது போதம். குருநாதனுடைய கிருபையால் ஞானம் வரவேண்டும். பற்று ஒழிப்பவனுக்கு ஞானம் விளையும். ஞானம் உண்டாகி விட்டால் அவனுக்கு இறையருள் கிடைக்கும். யாருடைய உதவியும் அவனுக்கு வேண்டியதில்லை. பொருளின்மேல் பற்று உள்ளவனுக்கு ஈகை வராது. அறி யாமை உள்ளவனுக்கு ஞானம் உண்டாகாது. பற்றும், அஞ்ஞான மும் உடையவர்கள் நாம். இவை போனால்தான் அருளைப் பெறலாம். இந்த இரண்டு குற்றமும் நீங்காமல், ஈகையை மேற் கொள்ளாமல், போதம் உறாமல் இருந்தேன் அடியேன். அத் தகையவனுக்கு நீ நல்ல வழி காட்டினாய்’ என்று சொல்கிறார். இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால் கெடுதல் இலாத் தொண்டரிற் கூட்டியவா! முருகன் செய்த தந்திரம் நீந்தத் தெரியாதவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டு மானால் தரையில் இருந்தபடியே கற்றுக்கொடுக்க முடியாது. ஆழம் இல்லாத இடத்திலே கொண்டுபோய்த் தள்ளிவிட வேண்டும். அங்கே கொஞ்சம் காலையும் கையையும் அடித்துக் கொள்ளப் பழகினால் நாளடைவில் நீச்சல் தானே வந்துவிடும். நீந்தத் தெரிந்த பிறகுதான் தண்ணிரில் இறங்க வேண்டும் என்று இருப்பவனுக்கு ஒரு காலும் நீச்சல் வராது. - 'முருகன் குறைபாடுடைய எளியேன் அருள்பெற ஒரு தந்திரத்தைச் செய்தான் என்கிறார் அருணகிரியார். 'நான் தர்மம் செய்யவில்லை. ஞானோபதேசமும் பெறவில்லை. நல்ல குரு நாதனைத் தரிசித்து ஞானம் பெறலாமென்றால் அதற்குத் தகுதி வேண்டும். அது இல்லாமையால் இந்தப் பிறவியில் ஒரு குருவை அடைவோம் என்ற நம்பிக்கையே இல்லை. இந்தப் பிறவி என்ன? இன்னும் பல பிறவிகள் எடுத்தாலும் அந்தப் பேறு கிட்டும் என்று தோன்றவில்லை. இடுதலும் ஞானமும் இல்லாத வெறும் ஆளாக இருந்தேன். அத்தகைய என்னையும் ஈடேறவைத்தான் முருகன். அது'பெரிய ஆச்சரியம் அல்லவா? 335