பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை அடுதலைச் சாதித்த வேலோன்; பிறவி அறஇச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாச வினைவிலங்கே, (கிரெளஞ்ச மலையை அழிக்கும் காரியத்தை நன்கு நிறைவேற்றிய வேலாயுதக் கடவுள், பிறருக்கு ஈவதைச் சிறிதளவேனும் எண்ணாதவனும், அறிவு இல்லாதவனுமாகிய அடியேனை, அன்பினால் யாதொரு கெடுதலும் இல்லாத அன்பர்களிலே ஒருவனாகச் சேர்ப்பித்தது என்ன ஆச்சரியம்! அதனால் பிறவியே அடியோடு அறும்படியாக, இந்த உடம்பாகிய சிறையில் வாழும் வாழ்வு விடுபட்டது; அதற்கு முன் பாசத்தால் அமைந்த இரு வினைகளாகிய விலங்குகளும் நெகிழ்ந்து போயின. இடுதல் - ஈதல். போதம் - ஞானம்; அறிவு. அன்பு காரணமாகக் கெடுதலே இல்லாமல் செய்துகொண்ட தொண்டர். அன்பால் இலா என்று கூட்டுக. தொண்டரின் - தொண்டரோடு. கூட்டியவா - கூட்டியவாறு என்ன வியப்பு. இறைவன் என்பால் உள்ள அன்பினாலே கூட்டினான் என்ற பொருள் பெறும் வகையில், 'அன்பால் கூட்டியவா என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். இச்சிறை என்பது உடம்பில் வாழும் வாழ்வை. விடுதலைப்பட்டது - விடுபட்டது, பாசத்தால் அமைந்த வினை. விட்டது: சாதி ஒருமை. பின்னாலே உண்டான பெரு விளைவுகளை எண்ணும்போது அவற்றுக்குக் காரணமாக அமைந்த நிகழ்ச்சி பெரு வியப்பை உண்டாக்கியது. பிறவி அற: அற என்ற எச்சம் காரியப்பொருட்டு. இச்சிறை விடுதலைப்பட்டது காரணம்; பிறவி அற்றது காரியம்.) தொண்டர்களின் உறவு ஜீவன்முக்தி நிலை வரையில் நம்மைக் கொண்டு சேர்க்கும் என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் நூறாவது பாட்டு. 349