பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 றருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற” என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் விண்ணப்பித்துக் கொள்கிறார். அருணகிரி நாதரோ, "எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே" என்று அந்த அநுபவம் தமக்குக் கைவந்ததென்று சொல்கிறார். யமன் வந்தாலும் அஞ்சாமல் நிற்கும் உறுதிப்பாடு தமக்கு இருப்பதை ஒரு பாட்டில் சொல்கிறார் (6). அந்தப் பாடல் இறுதிப் பாடலாக அமைந்திருப்பது ஒரு வகையில் பொருத்தமாக இருக்கிறது. இப்படி மூன்று பாடல்கள் அருண கிரிநாதர் பெற்ற உயர்ந்த அநுபவத்தைப் பேசுகின்றன (1, 3, 6). மற்ற மூன்று பாடல்கள் நமக்காகப் பாடியவை; நாம் இறை வனிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டியவை. இராப்பகல் அற்ற இடம் காட்டி அருள வேண்டும். ஆவிக்கு மோசம் வரும் - - てレ * - - என்பதை உணர்ந்து நின் திருவடியைச் சேவிக்க வேண்டும். 'உள்ளத்துயரை ஒழித்தருள வேண்டும் என்று அந்த மூன்று பாடல்களிலும் மூன்று வகை வேண்டுகோள்கள் இருக்கின்றன (2, 4, 5). முருகன் திருவடியில் தண்டையும் சிலம்பும் ஒளிர்கின்றன. குராமலரையும் அத் திருவடிகள் புனைந்திருக்கின்றன. அவை அருள் மயமாக உள்ளன. அவனுடைய தடம்புயங்கள் ஆறிரண் டிலும் கடம்பமாலை புரள்கின்றது. அந்தப் பன்னிரு தோள்களும் வரிசையாக இருபக்கங்களிலும் இருக்கின்றன. அவனுடைய திருக்கை ஒன்று அபயத்தைக் காட்டுகிறது. ஒரு கை வேலைப் பற்றியிருக்கிறது. அந்த வேல் மலையை ஊடுருவப் பொருத வடிவேல்; பராக்ரமவேல்; சிவந்த நிறம் வாய்ந்த சினவடிவேல். அவனுடைய திருமுகங்கள் ஆறும் மணம் வீசுகின்றன. கண்கள் தாமரை மலரைப் போல் விளங்குகின்றன. முருகன் குருவடிவாய் வருகிறவன் திருமால் மெச்சும் வீரம் உடையவன்; நிருதசங்கார பயங்கரன் சேவல் கொடி உடையவன் அமரசிகாமணி, வீரமுடைய சேவகன், வள்ளிக்கு வாய்த்தவன்; மயிலேறிய மாணிக்கம்; சிவ குமாரன், ஆறுமுகவன்; நம்பின வருக்கு மெய்த்துணையாக வருபவன். 356