பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பிள்ளையை அவர் நன்கு அறிந்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தத் திருமால் எத்தகையவர்? திருமாலின் பெருமை கரி கூப்பிட்ட நாள் கராப்படக் கொன்று அக் கரிபோற்ற நின்ற கடவுள். திருமால் மிகச் சிறந்தவர். உலகத்திற்கு ஆதியாகிய கடவுள் யார் என்ற கேள்விக்குத் திருமால் என்று சிலர் விடை சொல்வார்கள். சிவபெருமான்தான் என்று வேறுசிலர் சொல்வார்கள். ஆதி மூலமே என்று அழைத்த யானைக்கு முன்னே திருமால் வந்து நின்றார். அவரே எல்லாவற்றுக்கும் மூலமான பரம்பொருள் என்று கசேந்திரன் கதையைச் சொல்லித் திருமாலின் பெருமையை எடுத்துக் காட்டுவார்கள். 'யானையே சாட்சி சொல்லியிருக்கிறதே; ஆதிமூலமே என்று அது கூறும்போது பிரம்மா காப்பாற்ற வந்தானா? ருத்திரன் வந்தானா? அந்தப் பெயருக்கு உடையவன் நான்தான் என்று திருமால் எழுந்தருளிக் காப்பாற்றினார். அவரே எல்லோருக்கும் மூலக் கடவுள்' என்று பக்தர்கள் சொல்கிறார்கள். இதைக் கம்பன் பாடுகிறான். "கடுத்தகராம் கதுவநிமிர் கையெடுத்து மெய்கலங்கி உடுத்ததிசை அனைத்தினுஞ்சென் றொலிகொள்ள உறுதுயரால் அடுத்தபெருந் தனிமூலத் தரும்பரமே பரமே என்று எடுத்ததொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேனென்றாய்." 'ஒரு வாரணம் அழைப்ப நீ தானே வந்தாய்?" என்று கேட்கிறார். இப்படி விராதன் துதித்ததாகக் கம்ப ராமாயணத்தில் வருகிறது. யானையின் புலம்பல் எட்டுத் திசைகளிலும் எதிரொலித்ததாம். எல்லாத் தேவர்களுடைய காதிலும் கேட்டிருக்கும். ஆனாலும் அப்போது வந்து காப்பாற்றினவர் திருமாலே. இந்தக் கதையை மனத்தில் கொண்டு, கரி கூப்பிட்ட நாள் கராப்படக் கொன்று என்று அருணகிரியார் சொல்கிறார். அதனைக் காப்பாற்றிய திரு மாலை நன்றி உணர்வு பொங்க அந்த யானை போற்றி நின்றதாம். 390