பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சலம்காணும் வேந்தா தமக்கும்அஞ் சார்;யமன் சண்டைக்கு அஞ்சார்; துலங்கா நரகக் குழிஅணு கார்துட்ட நோய்அணுகார்; கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும்; கந்தன்நன்னூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே. தமக்குள்ளே பகையை உண்டாக்கும் கொடுங்கோல் மன்னர் களுக்கும் அஞ்சமாட்டார்கள்: யமன் மரண காலத்தில் வந்து துன்புறுத்தும் சண்டைக்கும் அஞ்சமாட்டார்கள்; ஒளியற்ற நரகமென்ற துன்பக்குழியின் பக்கத்தில்கூடப் போகமாட்டார்கள்; தீர்வதற்கரிய கொடிய நோயை அடையமாட்டார்கள்; புலி, கரடி, யானை இவற்றுக்கும் கலங்க மாட்டார்கள்; கந்தனைப்பற்றிய நல்ல நூலாகிய இந்த அலங்காரத்தில் உள்ள நூறு கவிகளுக்குள் ஒரு கவியையேனும் கற்று அதன் வழி நிற்க அறிந்தவர்கள். சலம் - பகை. தமக்கும் என்றது உயர்வு சிறப்பும்மை, வேந்தருக்கே அஞ்சார் என்றால் மற்றவர்களுக்கு அஞ்சாமை சொல்லவேண்டியதில்லை. துவங்கா - ஒளியற்ற, துலக்கம் - ஒளி. நரகக்குழி: 'எரிவாய் நரகக் குழியும்' என்று முன்பும் ஒரு பாட்டில் கூறினார். தான்: அசை. அறிந்தவர் அஞ்சார், அஞ்சார், அணுகார், கலங்கார் என்று முடியும்.) பிறருக்கு அச்சத்தை உண்டாக்கும் எதுவும் முருகனுடைய அடி யார்களுக்கு அச்சம் விளைவிக்க முடியாது என்பது இதன் கருத்து. இந்தப் பாடலோடு கந்தர் அலங்காரம் நிறைவேறுகிறது: பயனுள்ள நூலாக நிறைவேறுகிறது. நன்றாகத் தழைத்து வளர்ந்த பழமரத்தின் உச்சியில் கனி கனிந்து இலங்குவதைப் போல இந்த அருள் நூலில் முடிவில் நம்முடைய அச்சத்தைப் போக்குவதாகிய பயனைத் தரும் இப்பாடல் அமைந்திருக்கிறது. இப்படிச் சொல்வதற்கு அருணகிரியாருடைய உள்ளத்தில் எத்தனை உறுதிப்பாடு இருக்க வேண்டும் முருகன் நிச்சயமாக அருள் செய்வான் என்ற துணிவில் எழுந்த பாடல் இது. நமக்கும் அந்தத் துணிவு வர வேண்டும். "துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வார்' என்பது திருமந்திரம். 464