பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்று சூரனுடைய படை முழுவதும் நடுங்குகின்றது. படை வீரர் களுடைய உள்ளத்தில் உள்ள தைரியம் குலைகிறது. அப்போதே கால்வாங்கிப் பின்னிட்டு ஒடுகிறார்கள். எளிதில் முடித்தல் மிகச் சிறந்த வீரர்கள் பகைவர்களோடு போரிடும் போது மிகவும் முயன்று வெற்றியைப் பெற்றார்கள் என்று சொல்வது வழக்கம் அன்று. பேராற்றல் உடையவர்கள் எளிதிலே ஒரு காரியத்தைச் செய்துவிடுவார்கள். கம்ப ராமாயணத்தில் இதைப் புலப்படுத்தும் காட்சி ஒன்று வருகிறது. இராமன் ஜனகனுடைய சபைக்குப் போயிருக்கிறான். விசுவாமித்திரர் அவனை அழைத்துச் சென்றிருக்கிறார். சீதாபிராட்டிக்குத் திருமணம் ஆகவில்லை. சிவபெருமானுடைய வில்லை வளைப்பார் யாரோ அவருக்கே அந்தப் பிராட்டியைத் திருமணம் செய்து கொடுப்பதாக ஜனகன் உறுதிமொழி சொல்லியிருக்கிறான். அந்த வில்லோ ஆயிரக்கணக் கான மக்கள் எடுத்துவந்து வைப்பதற்குரியது; அவ்வளவு பெரியது; வலியது. அதனை யாராலும் வளைக்க முடியவில்லை. இனி, சீதைக்குத் திருமணம் நடக்குமோ, நடக்காதோ என்று ஐயுற்று ஜனகனும் பிறரும் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். அத்தகைய சமயத்தில் இராமன் வந்தான். அவனைக் கண்டவுடன் ஜனக னுக்குச் சிறிது நம்பிக்கை தளிர்த்தது. அவனது உள்ளக் குறிப்பை உணர்ந்த விசுவாமித்திரர் தம்முடைய கடைக்கண் பார்வையால் இராமனை ஏவினார். இராமன் வில்லின் அருகே சென்றான். 'தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில் மடுத்ததும் நாண்துதி வைத்ததும் நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்’ என்று இராமன் வில்லை முறித்த காட்சியை வருணிக்கிறான் கம்பன். இராமன் வில்லை மெதுவாக எடுத்து, நேரே நிறுத்தி, நாண் கயிற்றைத் தடவி, ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரைக்கும் மெல்ல அந்த வில்லை வளைத்து, நாணைப் பூட்டினான் என்று சொல்லலாமே; சொல்லவில்லை. எடுத்தது தெரிந்தது; பட்டென்று வில் ஒடிந்த ஒலியை எல்லோரும் கேட்டனராம். 38