பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தங்கினான். அவனுக்கு இந்தத் தாயும் குழந்தையும் இங்கே தங்கியிருப்பது தெரியாது. சிறிது நேரத்திற்கெல்லாம் கையில் நீரை எடுத்துக் கொண்டு அந்தணன் வந்தான். மரத்தடியை அடைந்தான். அங்கே அவன் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்திருந்தது. அவன் மனைவி பிணமாகக் கிடந்தாள். அவள் மார்பிலே ஓர் அம்பு குத்தியிருந்தது. அவள் உடம்பிலிருந்து பெருகிய இரத்த வெள்ளத்தில் குழந்தை கிடந்து கதறியது. இதைக் கண்ட அந்தணன் மிகவும் துடித்தான். 'யார் என் மனைவியைக் கொன்றார்கள்?' என்று கூவினான். பின்பு அந்த மரத்தைச் சுற்றிப் பார்த்த போது மரத்தின் மற்றொரு பக்கத்தில் வில்லும் அம்புமாக வேடன் நின்று கொண்டிருப் பதைக் கண்டான். இவன்தான் என் மனைவியைக் கொன்றிருக்க வேண்டுமென்று எண்ணி அவனை வையத் தொடங்கினான். வேடன், 'நான் ஒரு பாவத்தையும் அறியேன்” என்று சொன் னான். அந்தணனுக்கு நம்பிக்கை இல்லை, 'வா, அரசனிடம் போகலாம்' என்று தன் மனைவியின் பிணத்தைத் தோளிலும், குழந்தையைக் கையிலும் எடுத்துக் கொண்டு, வேடனை மற் றொரு கையால் பற்றி இழுத்துக் கொண்டு மதுரையை அடைந் தான்; பாண்டியனிடம் வந்து தன் வழக்கைச் சொன்னான். பாண்டியன் அந்த வேடனை விசாரித்தான். அவனோ தான் எந்தப் பாவமும் அறியாதவன் என்று சொன்னான். அவனை வற்புறுத்திக் கேட்டார்கள்; அடித்துக் கேட்டார்கள். மீண்டும் மீண்டும் தான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லையென்றே அவன் சொன்னான். அந்த நிலையில் பாண்டியனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கம் உண்டாயிற்று. அப்போது தான் மதுரையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெரு மானிடத்தில் சென்று, வேண்டிக் கொண்டான். 'மன்றாடும் மணியேஇம் மறவன்றான் பார்ப்பணியைக் கொன்றானோ, பிறர் பிறிதாற் கொன்றதோ? இதுஅற நூல் ஒன்றாலும் அளப்பரிதாக் கிடந்ததால்; உன்னருளால் என்தாழ்வு கெடத்தேற்றாய் என்றிரந்தான் அவ்வேலை." அப்போது இறைவன் அசரீரியாக, 'இந்த ஊருக்குப் புறம்பே வணிகர் தெரு ஒன்று இருக்கிறது; அங்கே செல். அங்கே ஒரு வீட்டில் திருமணம் நடக்க இருக்கிறது. அங்கே போனால் உனக்கு 48