பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு தேவர்களின் அச்சம் எல்லாவகையான போகங்களையும் பெற்று வாழ்கிறார்கள் தேவர்கள். அவர்களுக்குச் சோர்வே இல்லை; துக்கமே இல்லை. எப்போதும் போகத்தை நுகர்ந்து கொண்டிருப்பார்கள். அவர் களுடைய உடம்பு மினுமினு என்று இருக்கும். நோய் சிறிதும் இல்லாத திருமேனி உடையவர்கள் அவர்கள். இத்தகைய போகி களுக்குப் பெரிய துன்பம் ஒன்று வந்தது. அடுத்த நிமிஷத்தில் நாம் வாழ்வோமோ இல்லையோ என்று அஞ்சும்படியான துன்பம் அது. இறப்பே இல்லாமல் வாழ வேண்டுமென்று எண்ணி அவர் கள் அமுதம் பெறப் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது திடீரென்று ஆலகால விடம் எழுந்தது. அது பரவினால் முப்பத்து முக்கோடி தேவர்களும் அழிந்து போய்விடுவார்கள். எல்லா அண்டங்களும் சர்வநாசம் அடையும். அந்தத் தீங்கிலிருந்து தப்புவதற்கு, அல்லது வேறுவகையில் அதைத் தொலைப்பதற்கு வழியில்லாமல் திண்டாடினார்கள். சிவபெருமானிடம் ஓடிவந்து காலில் வீழ்ந்து கெஞ்சினார்கள். சிவபெருமான் தேவர்களுடைய சங்கடத்தைப் போக்குவதற்கு ஆலகால விடத்தை உண்டு நீலகண்டன் என்ற பெயரைப் பெற்றான். வெளியில் இருந்தால் தேவர்களைக் கொல்லும் என்றும், வயிற்றுக்குள்ளே போனால் அங்குள்ள அண்ட சராசரங்கள் அத்தனையும் அழிந்துவிடும் என்று கருதி அதனைத் தன்னுடைய கண்டத்தில் நிறுத்தினான். கண்டத்திற்குள் இருக்கும் ஆலம் தன்னுடைய கருமை நிறத்தைக் காட்டிக் கொண்டு அங்கே நின்றது. அதனால் சிவபெருமானை நீலகண்டன் என்று சொல்கிறார்கள். மைவரும் கண்டத்தர் என்று அருணகிரியார் சொல்கிறார். மையின் கரிய நிறம் தன் னிடம் வந்து அமைந்த திருக்கழுத்தை உடையவர் என்று பொருள். எவ்வளவு பெரிய செல்வர்களாக இருந்தாலும் அவர் களுக்கும் தீங்கு வரும் என்றும், அப்படி வருங்கால் அவர்கள் தம்முடைய ஆற்றலால் அதனைக் காக்கும் வல்லமை பெறமாட்டார் கள் என்றும், இறைவனை வந்து சரணடைந்தால் எத்தகைய பெரிய தீங்கானாலும் எளிதில் மாற்றி அவன் நலம் செய்வான் என்றும் அடியார்களுக்குக் காட்டிக்கொண்டு நிற்கிறது அது. 57