பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு இப்படி உலக வாழ்வில் துன்பம் எவ்வாறு யாரிடம் இருந்து வருமோ என்று அஞ்சிச் செத்துக் கொண்டிருக்கிறோம். அந்த அச்சம் போகவேண்டுமானால், அத்தகைய பெரிய துன்பத்தை மாற்றிக் காப்பாற்றும் அருளாளன் ஒருவன் நமக்குத் துணை இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போது எவ்வளவு கொடிய பிராணியாக இருந்தாலும் அதைக் கண்டு நமக்குத் துன்பம் இல்லை என்ற உறுதி வரும். 'தின்ன வரும்புலி தன்னையும் அன்புடன் சிந்தையிற் போற்றிடுவாய்' என்று பாரதியார் சொல்கிறார். அப்போது அவருடைய மன நிலை பராசக்தியின் திருவருளிலே உறுதியான நம்பிக்கையோடு இருந்தது. பயமற்ற நிலை புறநானூறு முதலிய நூல்களிலே இமயத்தில் வாழும் முனிவர்களைப் பற்றிய வருணனை வருகிறது. அவர்கள் அங்கே வேள்வி செய்கிறார்களாம். அந்த வேள்விச் சாலையைச் சுற்றிச் சூழ மான் நிற்குமாம். யானை விறகு கொண்டு வந்து கொடுக்குமாம். 'களிறுதரு விறகின் வேட்கும்’ என்று வருகிறது. குரங்குகள் முற்றத்தைப் பெருக்குமாம். கண் ணால் கண்டதை அப்படியே செய்கின்ற வழக்கம் உடையவை அல்லவா அவை? அங்குள்ள முனிவர்கள் யாரும் தங்களுக்கு ஊறு செய்ய மாட்டார்கள் என்று எண்ணி அந்த விலங்குகள் அப்படி வாழ்கின்றன. காட்டிலே வாழ்கின்ற மக்களைக் கேட்டால் இந்த உண்மை புலனாகும். சமீபத்தில் வேட்டையாடுவதில் வல்ல ஒருவரை நான் கண்டேன். 'புலி சிங்கம் முதலிய கொடிய விலங்குகளும் தம்மை மனிதன் துன்புறுத்துகிறான் என்று நினைத்தால்தான் அவன்மேல் பாய்கின்றன. நாம் ஒன்றும் செய்யாமல் நடமாடிக் கொண்டிருந்தால் அவை சும்மா பார்த்துவிட்டுப் போய்விடும். நம்மை மரங்களைப்போல எண்ணி ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டுப் போகும்' என்று சொன்னார். ரமண மகரிஷியிடத்தில் குரங்கும் அணிலும் அருகில் வந்து பழகியதைப் பார்த்தோம். 61