பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி சுவாசத்தை அடக்கி, குண்டலினி சக்தியை எழுப்பி, ஆறு ஆதாரங் களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் முட்டிச் சோதி தரிசனத்தைச் செய்து அநுபவத்தைப் பெற்று இன்புறுகிற வழியை இந்த நாட்டில்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள். அப்படி யோகம் செய்தவர்களுக்கு உடம்பு பொன்மயமாகும். தளர்ச்சி, மூப்பு ஆகிய துன்பங்கள் வாரா. பலகாலம் இந்த உடம்போடு இருந்து வாழலாம். இவ்வாறு யோக நூல்கள் சொல்கின்றன. வேறு எந்த நாட்டிலும் இத்தகைய நெறியை யாரும் கடைப் பிடிப்பது இல்லை. அவர்களுக்குத் தெரியாது. பல மகா யோகிகள் வாழ்ந்த நாடு இது. இப்போதும் இலை மறைவு காய் மறைவாகச் சிலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட பயிற்சி யோக முறை நாம் நினைக்கிறது போல அத்தனை எளி தன்று. சிலகாலம் அதனைப் பின்பற்றினால் போதாது. இளமை தொடங்கி அதற்கேற்ற வாய்ப்பு வேண்டும். நேற்று வரையிலும் உலக இயலில் ஈடுபட்டுக் கிடக்கிறவன் தொண்டர் கூட்டத்தில் பயின்று மனம் மாறி நெஞ்சு உருகிப் பக்தனாகிவிடலாம். யோகம் அப்படி வாராது. உடம்பை வளைத்துச் சர்க்கஸ் வித்தை காட்டு கிறவனுக்குக்கூட ஒரு வாரத்தில் அந்தப் பயிற்சி உண்டாகாது. இளமை தொடங்கியே உடம்பை வளைத்தும், நிமிர்த்தியும் உடலுறுப்புகளைத் தான் நினைத்தபடி இயக்கப் பழக்கம் செய்ய வேண்டும். ஒரு வகையில் யோகமும் அத்தகையதுதான். யோகத்தை எட்டு நிலைகளாகப் பிரிப்பார்கள். அதனால் அஷ்டாங்க யோகம் என்று பெயர் பெறும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டாகச் சொல்வார்கள். இயமம் யோக மார்க்கத்தில் முதல் படியாக இருப்பது இயமம். மனிதன் அடிப்படையான பல நல்ல குணங்களோடு இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. இன்சொல் பேச வேண்டும். எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும். இம்சை செய்யக் கூடாது. இவை போன்ற குணங்களே இயமம் என்ற பிரிவில் அடங்குவன. 69