பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் பகலைக் காட்டிலும் இரவை வரவேற்பேன்.
விழிப்பைக் காட்டிலும் துயிலை விரும்புவேன்.
நனவைக் காட்டிலும் கனவை யாசிப்பேன்.

இரவு மண்டபத்தில்
துயில் மேடையில்
கனவு நாடகம் நடைபெற வேண்டும்;
அதில் நீ நாயகியாக வர வேண்டும்.
இந்த வாழ்வு மட்டும் நிரந்தரமாகக்
கிடைத்தால் போதும்.

ஆனால்
கிடைப்பதாகத் தெரியவில்லையே!

இரவு என்னவோ ஒழுங்காக வருகிறது.
ஆனால்
எல்லா இரவுகளிலும் துயில் வருவதில்லையே!
எப்போதும் கனவு வருவதில்லையே!
துயிலும் கனவும் சேர்ந்து வந்தாலும்
பல வேளைகளில் நீ வருவதில்லையே!

என்மேல் உனக்கு இரக்கமில்லையே!

 

72

106