பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நீ அந்த மணலில் அமர்ந்திருக்கிறாய்

சொர்க்கத்தின் சாவியே
உன் கையிலிருப்பதைப் போல்
ஒரு கர்வங் கலந்த ஒய்யாரத்தோடு
அமர்ந்திருக்கிறாய்.

உன் மென்மையான விரலால்
மணலில் ஏதோ எழுதுகிறாய்.
உனக்குத் தெரியாமல்
உன் பின்னால் நின்றவாறு
ஏதேனும் புதிய ஓவியம் தீட்டுகிறாயோ
என்று கவனிக்கிறேன்.
ஓவியக்கலை
உன் கூட்ப்பிறந்த கலையாயிற்றே!

நான் நினைத்ததைப் போல்
நீ ஒவியம் வரையவில்லை.

மலைக் குகைகளிலும்
கல் மண்டபங்களிலும்
எதிரொலிக்கும் சப்தம் போல்
உன் உதடுகளின் உச்சரிப்பால்
என் இதய அறைகளில்
எப்பொழுதும் எதிரொலிக்கும்
உன் திருப்பெயரை முதலில் எழுதிப்
பக்கத்தில் என் பெயரையும் இணைக்கிறாய்.

என் பெயரின்
முதல் இரு எழுத்துக்களைத்
தொடங்கும்போதே
இன்பக்காற்று
என்னை உன் முன்னால்
இழுத்துப் போடுகிறது.

 

66