பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

                ஆராதனை

சாவ தெனில்நான் சாவேன் உன்றன்
      சந்தி தானத்தில் - அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணிர்ப்
      பூவி மானத்தில்

ஆரா தனையில் ஆருயிர் வாசனை
     அழகுகள் சொரிந்தேனே - தினமும்
பாரா யணமாய் உன்திருப் பெயரைப்
     பாடித் திரிந்தேனே!

வேகம் குறைய வில்லை; மேலும்
      வேதனை கூட்டாதே - என்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
      பக்தனை வாட்டாதே!

முன்போர் சமயம் தீண்டி யவன் என
      முகத்தை வெறுக்காதே - பொங்கும்
அன்போர் சமயமும் அடங்காது; உனைச்சரண்
      அடைந்தேன் மறுக்காதே

தேவி, உனதருள் தேடிவந் தேன்;உயிர்த்
      தீர்த்தம் கொடுப்பாயே - இல்லை
‘பாவிஇவன்’ எனப் பட்டால் எனை நீ
      பலியாய் எடுப்பாயே!

சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
      சந்தி தானத்தில் - அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணிர்ப்
      பூவி மானத்தில்!